• Sat. Jan 17th, 2026
WhatsAppImage2026-01-15at114305
previous arrow
next arrow
Read Now

கோவையில் நடைபெற்ற தாண்டிய நடன நிகழ்ச்சி.., நிதி திரட்டுவதற்காக வண்ண ஆடைகள் அணிந்த வட மாநிலத்தவர் நடனமாடி அசத்தல்…

BySeenu

Oct 2, 2024

கோவையில் சுகாதாரம் மற்றும் ஆரோக்கியம் தொடர்பான உதவி தேவைப் படுவோர்களுக்கு நிதி திரட்டும் வகையில் ரோட்டரி கிளப் ஆப் காட்டன் சிட்டி சார்பாக சியால்ஸ் தாண்டியா நடனம் எனும் பி்ரம்மாண்ட நிகழ்ச்சி நடைபெற்றது.

நவராத்திரி பண்டிகைக்கு இன்னும் சில தினங்களே உள்ள நிலையில்,
கோவையில், ரோட்டரி கிளப் ஆப் காட்டன்சிட்டி சார்பாக சியால்ஸ் தாண்டியா இரவு எனும் கலா தாண்டிய நிகழ்ச்சி கிக்கானி பள்ளி வளாகத்தில் நடைபெற்றது.
இரண்டாவது பதிப்பாக நடைபெறும் இந்நிகழ்ச்சி, சமூகத்தி்ல் பின் தங்கி உள்ளவர்களுக்கு நிதி திரட்டும் வகையில் நடைபெற்றது.

குறிப்பாக, லிட்டில் மிராக்கிள்ஸ் எனும் திட்டத்தின் கீழ் குறை பிரசவத்தில் பிறக்கும் குழந்தைகளுக்கு சிகிச்சை செய்ய நிதி உதவி, ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனையில் உள்ள நெக்டர் ஆஃப் லைஃப் எனும் தாய்மார்களின் பால் வங்கி சேவைகளை விரிவு படுத்துவதோடு, பல்வேறு மருத்துவமனைகளில் புதிய நெக்டார் எனும் எனி டைம் பால் சென்டர்களை அதிகபடுத்துவது, கேன் கேர் திட்டத்தில்,புற்று நோயால் பாதித்தவர்களுக்கு கீமோ தெரபி சிகிச்சைக்கான நிதி உதவி, ஸ்மைல் வேஸ் எனும் திட்டத்தின் கீழ், பள்ளிக் குழந்தைகளுக்கான பல் சிகிச்சைக்கான நிதி உதவி,
பிரின்சஸ் புரொடக்டர் எனும் திட்டத்தின் கீழ் கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோய் தடுப்பூசிகள் பற்றிய விழிப்புணர்வை உருவாக்குவது என பல்வேறு மருத்துவ சமூக உதவிக்கென நிதி திரட்டும் வகையில் இந்த நிகழ்ச்சி நடைபெறுவதாக ஒருங்கிணைப்பாளர்கள் தெரிவித்தனர்.

இந்நிகழ்ச்சியில், குஜராத் உள்ளிட்ட வட மாநிலங்களை சேர்ந்த ஆயிரத்திற்கும் மேற்ப்பட்ட ஆண்கள், பெண்கள், சிறுவர், சிறுமியர் கலந்து கொண்டு ‘கர்பா மற்றும் தாண்டியா நடனம் ஆடி மகிழ்ந்தனர்.

வண்ண உடைகள் அணிந்து வடஇந்திய கலாசாரத்தை பிரதிபலிக்கும் இளைஞர்கள், சிறுவர்கள் மற்றும் பெரியவர்கள் ஆகியோர் இணைந்து தாண்டியா நடனம் ஆடியது காண்பவர்களையும் உற்சாகப்படுத்தியது.

சியால் டெவலப்பர்ஸ் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் கமல் சியால்,ஏற்பாட்டில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியை, ரோட்டரி கிளப் ஆப் கோயமுத்தூர் காட்டன் சிட்டி தலைவர் குமார்பால் தாகா, செயலாளர் அர்ச்சனா குமார், நிகழ்ச்சி தலைவர் சந்தோஷ் முந்தாரா, இணை தலைவர் பிரதீப் கர்னானி, ஆன் குஷ்பூ கோத்தாரி, சுப்ரமணியம், பத்ம குமார் நாயர் ஆகியோர் ஒருங்கிணைத்தனர்.