

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னை பாரதி மகளிர் கல்லூரி வளாகத்தில் நடைபெற்ற விழாவில் தில்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் முன்னிலையில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை சார்பில், மூவலூர் இராமாமிர்தம் அம்மையார் நினைவு உயர்கல்வி உறுத்தித்திட்டத்தின் கீழ் அரசு பள்ளிகளில் 6 முதல் 12-ம் வகுப்பு வரை பயின்று உயர்கல்வி பயிலும் மாணவிகளுக்கு மாதந்தோறும் ரூ.1000ம் கல்வி உதவித்தொகை வழங்கும் புதுமைப்பெண் திட்டத்தினை காணொளி வாயிலாக தொடங்கி வைத்தார்.
அதனைத்தொடர்ந்து, தென்காசி மாவட்டத்தில் புதுமைப்பெண் திட்ட தொடக்கவிழா நிகழ்ச்சி தென்காசி இ.சி.ஈ. அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி வளாகத்திலுள்ள கலையரங்கத்தில் மாவட்ட ஆட்சியர் ப.ஆகாஷ் தலைமையில் நடைபெற்றது. இந்த
நிகழ்ச்சியில் தென்காசி மாவட்ட ஆட்சியர் ப.ஆகாஷ் பேசியதாவது:
தமிழ்நாடு முதலமைச்சர் பெண்கள் உயர்கல்வி கற்பதை ஊக்கப்படுத்தும் வகையில் புதுமைப்பெண் திட்டத்தை அறிவித்து செயல்படுத்தி இருக்கிறார். இத்திட்டமானது, தேவதாசி முறையை ஒழிக்க பாடுபட்ட மூவலூர் இராமாமிர்தம் என்ற பெண் சமூக சீர்திருத்தவாதியின் பெயரில் செயல்படுத்தப்பட்டுள்ளது. குடும்ப சூழல் மற்றும் வறுமை காரணமாக உயர்கல்வி படிக்க இயலாத மாணவிகளுக்கு இத்திட்டம் பேரூதவியாக அமையும்.
இத்திட்டத்தின் கீழ் பயன்பெறும் மாணவிகள் 6-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை அரசு பள்ளியில் படித்து தமிழ்நாட்டில் உயர்கல்வி பயில்பவராக இருத்தல் வேண்டும். எனவே பெண்குழந்தைகளின் விருப்பத் தேர்வுகளின் படி அவர்களது மேற்படிப்பை தொடர ஊக்குவிக்கும் வகையில் அரசு அளித்திருக்கும் இந்த வாய்ப்பினை அரசு பள்ளிகளில் பயிலும் மாணவியர் சரியாக பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என தெரிவித்தார்.
இந்நிகழ்ச்சியில் தென்காசி மாவட்டத்தில் முதற்கட்டமாக 619 மாணவியர் இத்திட்டத்தின் கீழ் பயனடைய உள்ளனர். நிகழ்ச்சியில் 200 மாணவிகளுக்கு வேலைவாய்ப்பு வழிகாட்டி புத்தகம், நிதிகல்வி புத்தகம் அடங்கிய “புதுமைப்பெண்” பெட்டகப் பை மற்றும் வங்கி பற்று அட்டையினை மாவட்ட ஆட்சியர் ப.ஆகாஷ், தென்காசி நாடாளுமன்ற உறுப்பினர் தனுஷ்.எம்.குமார் ஆகியோர் வழங்கினர்.
இந்த நிகழ்ச்சியில் மாவட்ட சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அலுவலர்(பொ) முத்துமாரியப்பன் வரவேற்புரையாற்றினார். சட்டமன்ற உறுப்பினர்கள் தென்காசி எஸ்.பழனி நாடார், சங்கரன்கோவில் .ஈ.ராஜா, வாசுதேவநல்லூர் டாக்டர் ட தி.சதன் திருமலைக்குமார் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். சகி-ஒன் ஸ்டாப் சென்டர் மைய நிர்வாகி க.ஜெயராணி நன்றி கூறினார்.
இந்த விழாவில் தென்காசி மாவட்ட ஊராட்சி குழு தலைவர் தமிழ்செல்வி போஸ், மாவட்ட ஊராட்சி குழு துணைத்தலைவர் ஆயிரப்பேரி தி. உதயகிருஷ்ணன், தென்காசி நகர்மன்றத் தலைவர் ஆர். சாதிர், நகர்மன்ற துணைத்தலைவர் கே.என்.எல்.சுப்பையா, ஒன்றிய குழுத்தலைவர்கள் வல்லம் ஹாஜி மு.சேக்அப்துல்லா (தென்காசி), செல்லம்மாள் (கடையம்), திருமலைச்செல்வி (செங்கோட்டை), செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் இரா.இளவரசி, மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் கபீர், மண்டல மேலாளர் இந்தியன் ஓவர்சீஸ் வங்கி புலுசு வெங்கட்ராமரவி (திருநெல்வேலி மண்டலம்), மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் ஜெ.எம்.விஷ்ணுவர்தன் மற்றும் மாணவியர் உட்பட பலர் கலந்துகொண்டனர்.
