மதுரை மாவட்டம் வாடிப்பட்டி மேட்டு நிரேத்தான் கிராமத்தில் உள்ள துர்க்கை அம்மன் கோவிலில் சாமி கும்பிடுவதில் இரு தரப்பினருக்கு இடையே ஏற்பட்ட மோதல் காரணமாக கடந்த 25. 5. 2025 அன்று வருவாய் துறை மற்றும் காவல்துறையினர் மூலம் கோவில் பூட்டப்பட்டது.

இந்த நிலையில் கடந்த நான்கு மாதங்களாக கோவில் பூட்டி இருந்த நிலையில் இரு தரப்பினரை வைத்து அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தியதன் மூலம் இருதரப்பினரையும் வைத்து கோவில் திறக்கப்படும் என கூறப்பட்டிருந்தது.
இந்த நிலையில் காலை 11 மணியளவில் கோவிலுக்கு வந்த ஒரு தரப்பினரை வைத்து வருவாய்த்துறை மற்றும் காவல் துறையினர் கோவிலை திறந்ததாக கூறப்படுகிறது அதிருப்தி அடைந்த மற்றொரு தரப்பினர் ஒரு தரப்பினரை மட்டும் வைத்து ஏன் கோவிலை திறந்தீர்கள் எனக் கூறி கோவிலை மீண்டும் பூட்ட வேண்டும் எனக் கூறியும் கோவில் முன்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். சமயநல்லூர் காவல்துறை துணை கண்காணிப்பாளர் தலைமையில் சோழவந்தான் மற்றும் வாடிப்பட்டியை சேர்ந்த காவல்துறையினர் 50-க்கும் மேற்பட்டோர் கோவில் முன்பு குவிக்கப்பட்டுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டது.

இதனை அடுத்து இரு தரப்பினரிடம் பேசிய அதிகாரிகள் தலா ஐந்து நபர்கள் வீதம் கோவிலுக்குள் அனுமதித்து வழிபாடு நடத்துவது என முடிவு செய்து அதன்படி தலா ஐந்து நபர் வீதம் கோயிலுக்குள் அனுமதித்து வழிபாடு நடத்த ஏற்பாடு செய்தனர்.