கோவை மாவட்டத்தின் அரசு மேல் நிலைப்பள்ளி மாணவர்களின் புதுமையான கண்டுபிடிப்பு சமூக வலைதளங்களில் பெரும் வரவேற்பைப் பெற்று உள்ளது.
பார்வையற்றோருக்கு உதவும் வகையில் சென்சார் தொழில் நுட்பத்தைப் பயன்படுத்தி ஸ்மார்ட் வாக்கிங் ஸ்டிக் மற்றும் ஸ்மார்ட் கண்ணாடி ஆகியவற்றை இம்மாணவர்கள் உருவாக்கி உள்ளனர்.
சூலூர் அருகே உள்ள அரசூரைச் சேர்ந்த அரசு மேல் நிலைப் பள்ளியில் பயிலும் ஏழாம் வகுப்பு மாணவர்கள் கே. ஐசக் ஜெபக்குமார், ஆர். மருதீஷ் மற்றும் ஜே. வீரமணி ஆகியோர் பள்ளியில் செயல்படும் கற்றல், கற்பித்தல் ஆய்வுக் கூடத்தில், எளிய பொருட்களைப் பயன்படுத்தி இந்த தொழில் நுட்ப உபகரணங்களை உருவாக்கி உள்ளனர்.
சென்சார் மற்றும் சிப் போர்டுகளைப் பயன்படுத்தி மாணவர்களால் உருவாக்கப்பட்ட வாக்கிங் ஸ்டிக், அதிர்வுகளை உணர்ந்து பயனாளருக்கு எச்சரிக்கை செய்கிறது. இதன் மூலம் பார்வையற்றோர் தடைகள் மற்றும் படிக்கட்டுகள் குறித்து முன்கூட்டியே அறிந்து கொள்ள முடியும். மைக்ரோ கண்ட்ரோலர் மற்றும் சென்சார்கள் பொருத்தப்பட்ட கண்ணாடி, பேட்டரி மூலம் இயங்குகிறது. இது பயனாளருக்கு முன்னால் உள்ள தடைகளை அடையாளம் கண்டு, ஒலி மூலம் எச்சரிக்கை செய்கிறது.
இது குறித்து மாணவர்கள் கூறும்போது,
தங்களது ஆசிரியரின் வழிகாட்டுதலின் படி இந்த கருவிகளை தயாரித்ததாகவும், இந்த கருவிகள் பார்வையற்றோரின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்தும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது எனவும் தெரிவித்தனர். மேலும் AI தொழில்நுட்பம் மற்றும் Google Maps-ஐப் பயன்படுத்தி இந்த கருவிகளை மேம்படுத்த திட்டமிட்டு உள்ளனர். இதன் மூலம் பார்வையற்றோர் தங்களது சுற்றுப் புறத்தைப் பற்றி தெரிந்து கொள்ளவும், சுதந்திரமாக இடம் பெயரவும் முடியும் என மாணவர்கள் தெரிவித்தனர். அரசு பள்ளி மாணவர்களின் கண்டுபிடிப்பு, பிற மாணவர்களுக்கு தொழில்நுட்பத்தில் ஆர்வத்தை ஏற்படுத்துவதோடு, தன்னம்பிக்கையையும் ஊக்குவிக்கும் என்பதில் ஐயம் ஏதுமில்லை.