• Sat. Nov 1st, 2025
WhatsAppImage2025-10-23at221255
WhatsAppImage2025-10-23at2213003
WhatsAppImage2025-10-23at221300
WhatsAppImage2025-10-23at2213004
WhatsAppImage2025-10-23at2213002
WhatsAppImage2025-10-23at221253
WhatsAppImage2025-10-23at221250
WhatsAppImage2025-10-23at2213001
WhatsAppImage2025-10-23at221249
WhatsAppImage2025-10-23at221252
WhatsAppImage2025-10-23at2213005
WhatsAppImage2025-10-23at2213006
WhatsAppImage2025-10-23at221251
previous arrow
next arrow
Read Now

மாணவரை அடித்து காயப்படுத்திய ஆசிரியர் – ஓ.பி.எஸ் கண்டனம்

Byமதி

Dec 12, 2021

கோவை கணபதி பகுதியைச் சேர்ந்தவர் தனியார் நிறுவன ஊழியரான கலாதரன். இவரது 16 வயது 2வது மகன் (மிதுன்) அதே பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் 11ம் வகுப்பு பயின்று வந்தார்.

கால்பந்து வீரராகவும் மிளிர்ந்து வரும் சிறுவன், கோவை மாவட்ட அணிக்கு தேர்வாகியுள்ளார். மேலும் நீட் பயிற்சியும் மேற்கொண்டு வருகிறார். பள்ளி திறந்து ஒரு மாதமே ஆகியுள்ள நிலையில், மாணவருக்கு தைக்கப்பட்ட சட்டை இறுக்கமாக இருந்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில் பள்ளிக்கு சென்ற போது, அங்கு வகுப்பறைக்கு வந்த இயற்பியல் ஆசிரியர் சிவரஞ்சித் என்பவர், சட்டை ஏன் இறுக்கமாக அனிந்துள்ளாய்  என கேட்க, அதற்கு மாணவர் விளக்கமளித்தும், சமாதானம் அடையாத ஆசிரியர் அவரை அறைந்ததோடு, அவரை குனியவைத்து சரமாரியாக தாக்கியுள்ளார்.

இதில் மாணவருக்கு காது, கழுத்து, முதுகு ஆகிய பகுதிகளில் காயம் ஏற்பட்டது. இதையடுத்து மாணவர் அளித்த தகவலின் பேரில் அவரை கோவை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்து சென்றார்.

இது தொடர்பாக கலாதரன் அளித்த புகாரின் பேரில் சரவணம்பட்டி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். சரவணம்பட்டி போலீசார் ஆசிரியர் சிவ ரஞ்சித் மீது இந்திய தண்டனைச் சட்டம் 323 கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

இந்நிலையில், கோவை மாணவர் தாக்கப்பட்ட விவகாரம் தொடர்பாக அ.தி.மு.க ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வம் வெளியிட்ட அறிக்கையில், ‘ஒழுக்கம் என்பது எண்ணத்தாலும், சொல்லாலும், செயலாலும் தூய்மையாக நடந்துகொள்வது ஆகும். ஒழுக்கம் ஒருவனுக்கு மிகப் பெரிய சிறப்பைத் தருவதால், ஒழுக்கம் உயிரைக் காட்டிலும் மேலானது என்கிறார் திருவள்ளுவர். இப்படிப்பட்ட இன்றியமையாத் தன்மை வாய்ந்த ஒழுக்கம் பேணப்பட வேண்டும் என்பதற்காகத்தான் நாட்டில் சட்டங்கள் இயற்றப்பட்டு நடைமுறைப்படுத்தப்படுகின்றன. இருப்பினும், கடந்த ஆறு மாத காலமாக, அதிகாரிகளை மிரட்டுவது, அரசு நிர்வாகத்தில் தலையிடுவது, பெண்களைப் பேருந்திலிருந்து இறக்கிவிடுவது, பெண்களுக்குப் பாலியல் தொல்லை கொடுப்பது என ஒழுக்கக் கேடுகள்தான் தமிழகத்தில் நடைபெற்று வருகின்றன.

இதனைத் தொடர்ந்து, அந்த மாணவர் கோவை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்துச் செல்லப்பட்டுள்ளதாகவும், தந்தை அளித்த புகாரின் பேரில் காவல் துறையினர் விசாரணை நடத்தி வருவதாகவும் தகவல் வந்துள்ளது. சினம், பொறாமை, பிறர் பொருளுக்கு ஆசைப்படுதல், கொடிய சொற்கள் ஆகிய நான்கை நீக்கி ஒழுகுதலே அறம் எனப்படுகிறது. இந்த அறச் செயலை மாணவ, மாணவியருக்குக் கற்றுத் தரவேண்டிய ஆசிரியர்களே ஒழுக்கத்தை மீறி, அறம் தவறிச் செயல்படுவது மிகவும் வருத்தமளிக்கக்கூடிய ஒன்றாகும்.

சட்டையை இறுக்கமாகப் போடுவது என்பது ஒரு சாதாரண செயல். இதற்கென்று தனி விதி ஏதுமில்லை. ஒருவேளை இறுக்கமாகப் போடுவது ஒழுங்கீனம் என்று கருதினால், அந்த ஆசிரியரே மாணவருக்கு அறிவுரை வழங்கி இருக்கலாம் அல்லது அந்தப் பள்ளி நிர்வாகத்திடமோ, முதல்வரிடமோ, தலைமை ஆசிரியரிடமோ தெரிவித்து இதுகுறித்து ஒரு பொதுவான வழிகாட்டுதலை வழங்கி இருக்கலாம். அவ்வாறு செய்யாமல், ஆசிரியரே ஒழுங்கீனமாகச் செயல்படுவது, மாணவரை சரமாரியாகத் தாக்குவது என்பது ஏற்றுக்கொள்ளக் கூடியதல்ல. இதற்கு அதிமுக சார்பில் கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

ஒழுக்கத்தினால் அடைவது மேன்மை, ஒழுக்கமின்மையால் அடைவது எய்தாப் பழி என்பதைப் புரிந்துகொண்டு அதற்கேற்ப ஆசிரியர்கள் நடந்துகொள்ள வேண்டும் என்று கேட்டுக் கொள்வதோடு, இதுபோன்ற செயல் குறித்து நடவடிக்கை எடுக்க வேண்டிய பொறுப்பும், கடமையும் அரசுக்கு இருக்கிறது என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

எனவே, முதல்வர் இதில் உடனடியாகக் கவனம் செலுத்தி, சிறார்களும், மாணவ, மாணவியரும் பள்ளிகளில் எவ்வாறு நடந்துகொள்ள வேண்டும் என்பது குறித்துத்தக்க அறிவுரைகள் வழங்கவும், இனி வருங்காலங்களில் இதுபோன்ற செயல்கள் நடைபெறாமல் இருக்கவும், ஒழுக்கமற்ற செயல்களில் ஈடுபடுவோர் மீது தக்க நடவடிக்கை எடுக்கவும் வழிவகை செய்ய வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்’ என்று தெரிவித்தார்.