• Mon. Jan 19th, 2026
WhatsAppImage2026-01-15at114305
previous arrow
next arrow
Read Now

தமிழர்களுக்கு என்.எல்.சி வேலைவாய்ப்பில் இடஒதுக்கீடு தேவை – மதுரை எம்.பி சு.வெங்கடேசன் கோரிக்கை

ByA.Tamilselvan

Apr 23, 2022

நெய்வேலி அனல் மின் நிலையத்தில் குறிப்பிட்ட சதவிகிதம் தமிழர்களுக்கு வேலைவாய்ப்பில் இடஒதுக்கீடு தரப்பட வேண்டுமென சு.வெங்கடேசன் எம்.பி கோரிக்கை வைத்துள்ளார்.
இதுகுறித்து சு.வெங்கடேசன் எம்.பி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது,
நெய்வேலி அனல் மின் நிறுவனத்தில் “பட்டதாரி நிர்வாக பயில்நர்” (Graduate Executive Trainees) பதவிக்கான 300 காலியிடங்களை நிரப்புவதற்கான அறிவிக்கையை (எண் 02/2022) என்.எல்.சி வெளியிட்டு இருந்தது.
ஏற்கெனவே 2020 இல் இதே பதவிக்கான பணி நியமனங்கள் நடைபெற்றன. ஆனால் 2022 இல் தேர்வு முறைமையில் ஒரு மாற்றம் கொண்டு வரப்பட்டுள்ளது. GATE – 2022 மதிப்பெண் அடிப்படையில் தேர்வு பட்டியல் அமையும் என்று அறிவிக்கப்பட்டது.
கேட் 2022 தேர்வுகள் தகுதியாக நிர்ணயிக்கப்படும் என்று தெரிந்திருந்தால் பலர் தயார் ஆகி இருப்பார்கள். ஆனால் அதற்கான அவகாசம் தரப்படவில்லை. அறிவிக்கை மிக மிக நெருக்கு வெட்டில் வெளியிடப்பட்டுள்ளது. ஆகவே கேட் 2022 எழுதாதவர்கள் தேர்வு முறைமைக்கு வெளியே நிறுத்தப்பட்டு விட்டனர். இது அநீதியானது. சமவாய்ப்பை மறுப்பது.
அதே போல. தேர்வுப் பட்டியலின் உள்ளடக்கம் தமிழர்களுக்கான பிரதிநிதித்துவம் கேள்விக் குறியாகி இருக்கிறது. 2010 க்கு முன்பாக தேர்வுப் பட்டியலில் 80 சதவீதம் பேர் வரை கூட தமிழ்நாட்டை சேர்ந்தவர்கள் இடம் பெற்றதுண்டு. 2020 இல் 5 % க்கும் கீழே இந்த விகிதம் போய் விட்டது.
இந்த தேர்வுப் பட்டியல் வெளிவந்தால் பேரதிர்ச்சியை தரக் கூடும். 300 பேர் கொண்ட தேர்வுப் பட்டியலில் ஒரு தமிழராவது இருப்பாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.
என்.எல்.சி தலைவர் திரு ராகேஷ் குமாருக்கு நான் எழுதியுள்ள கடிதத்தில், அறிவிக்கை எண் 02/2022 ஐ ரத்து செய்ய வேண்டும். தேர்வுப் பட்டியலை வெளியிட வேண்டாம்.மீண்டும் முந்தைய முறைமையின் அடிப்படையில் தேர்வை நடத்த வேண்டும். குறிப்பிட்ட சதவீதம் தமிழக இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பில் இட ஒதுக்கீடு தரப்பட வேண்டும் என்று அதில் கூறியிருக்கிறார்.