• Thu. Mar 28th, 2024

மேல்நிலைப்பள்ளி செய்முறைத் தேர்வு இரண்டு மணிநேரமாகக் குறைப்பு..,
பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு..!

Byவிஷா

Apr 23, 2022

11, 12ஆம் வகுப்புகளுக்கான செய்முறைத் தேர்வு இரண்டு மணி நேரமாக குறைக்கப்பட்டுள்ளது.
கொரோனா பரவல் காரணமாக பொதுத் தேர்வுகள் கடந்த இரண்டு ஆண்டுகளாக திட்டமிட்டபடி நடத்தப்படவில்லை. இந்த ஆண்டு கட்டாயம் பொதுத் தேர்வு நடத்தப்படும் என பள்ளிக் கல்வித்துறை ஏற்கெனவே அறிவித்திருந்தது. மூன்று திருப்புதல் தேர்வுகள் நடைபெற்ற நிலையில் திங்கள் கிழமை முதல் செய்முறைத் தேர்வுகள் தொடங்க உள்ளன. மே முதல் வாரம் முதல் பொதுத் தேர்வுகள் நடத்தப்பட உள்ளன. இந்நிலையில் 11, 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கான செய்முறைத் தேர்வு நேரம் மூன்று மணி நேரத்திலிருந்து, இரண்டு மணி நேரமாக குறைக்கப்பட்டுள்ளது. செய்முறைத் தேர்வுக்கான மதிப்பெண்கள் 50 லிருந்து 30ஆக குறைக்கப்பட்டுள்ளது. அதில் 10 மதிப்பெண்கள் அகமதிப்பீட்டு மதிப்பெண்கள் ஆகும். எனவே 20 மதிப்பெண்களுக்கான செய்முறைத் தேர்வை 2 மணி நேரத்தில் மாணவர்களால் எளிதாக எழுத முடியும் என பள்ளிக் கல்வித்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. மேலும் பொதுத் தேர்வுக்கு குறைவான நாள்களே உள்ள நிலையிலும் செய்முறைத் தேர்வு நேரம் குறைக்கப்பட்டுள்ளது. தேர்வு நேரம் குறைப்பு விவரம் மாணவர்களுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு பகுதிகளிலும் மாணவர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப செய்முறைத் தேர்வு இரண்டு அல்லது மூன்று கட்டங்களாக நடத்தப்படும். சென்னையைப் பொறுத்தவரை இரண்டு கட்டங்களாக செய்முறைத் தேர்வு நடைபெறும் என பள்ளிக் கல்வித்துறை வட்டாரங்களில் கூறப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *