• Fri. Apr 26th, 2024

58 கிராம கால்வாயில் தண்ணீர் திறக்க நிரந்தர அரசாணை வழங்கக்கோரி தமிழ் தேசிய பார்வர்டு பிளாக் கட்சியினர் ஆர்ப்பாட்டம்!..

By

Aug 22, 2021

தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே உள்ள வைகை அணையில் 58 கிராம கால்வாய் மதகு பகுதியில் தமிழ் தேசிய பார்வர்டு பிளாக் கட்சியினர் தண்ணீர் திறக்க வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

கடந்த சில மாதங்களாகவே வைகை அணையின் நீர்ப்பிடிப்பு பகுதிகளான மூல வைகை, வருஷநாடு கொட்டக்குடி ஆறு ஆகிய பகுதிகளில் தென்மேற்கு பருவ மழை தொடர்ந்து பெய்து வந்த காரணத்தினாலும், முல்லைப் பெரியாற்றில் இருந்து நீர்வரத்து ஏற்பட்டதாலும் ,அணையின் நீர்மட்டம் 60 அடிக்கு மேலாக நிலைநிறுத்தப்பட்டு வருகிறது.

இதனை அடுத்து மேலூர் கள்ளந்திரி வரையிலான 45,000 ஏக்கர் விளைநிலங்களுக்கு கடந்த 100 நாட்களுக்கும் மேலாக விவசாயத்திற்காக தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. மீண்டும் அணையின் நீர்மட்டம் உயர்ந்து 69 அடியை எட்டியதால் உபரி நீர் வெளியேற்றப்பட்டு, தேனி, திண்டுக்கல், மதுரை சிவகங்கை பாசன பகுதிகளான ஒரு லட்சம் ஏக்கர் நிலங்கள் பயன்பெறும் வகையில் தற்போது அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் நிலையான அரசாணை இல்லாத காரணத்தால் 58 கிராம கால்வாய் பகுதியில் தண்ணீர் திறக்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
கடைமடை யிலுள்ள ராமநாதபுரம் பகுதிக்கு தண்ணீர் திறந்து விட்ட பின்பு தான், நீர் இருப்பை பொறுத்து 58 கிராம கால்வாய் தண்ணீர் திறந்து விட முடியும் என்று பொதுப்பணித் துறையினர் கூறி வருகின்றனர்.

இதனால் மதுரை மாவட்டம் உசிலம்பட்டி பகுதிகளிலுள்ள விருவீடு, பாப்பாபட்டி ,நாட்டா பட்டி, நடுப்பட்டி ,லிங்கப்ப நாயக்கனூர்,அய்யனார்குளம் உள்ளிட்ட 58 கிராமங்களிலுள்ள முப்பத்தி ஆறு கண்மாய்களுக்கும் ,நீர்வரத்து இல்லாமல் வறண்டு போய் விவசாயம் செய்ய முடியாமல் பாதிப்பு ஏற்பட்டுள்ளது .

கடந்த திமுக ஆட்சியில் கலைஞர் முதல்வராக இருந்தபோது திட்டமிடப்பட்டு நிறைவேற்றப்பட்ட 58 கால்வாய் திட்டத்தின் நோக்கம் நிறைவேறாமல் உள்ளது, குறித்து இப்பகுதி விவசாயிகள் வேதனை தெரிவித்தனர். இதனையடுத்து இன்று காலை தமிழ் தேசிய பார்வர்டு பிளாக் கட்சியின் நிறுவனத்தலைவர் சங்கிலி, மாநில தலைவர் முருகன் மற்றும் மாநில மாவட்ட நிர்வாகிகள் முன்னிலையில் வைகை அணை மதகு பகுதியில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வைகை அணை நீர்மட்டம் 67 அடியை தொட்டதும், உடனடியாக 58 கால்வாய் நீர் திறக்க நிரந்தர அரசாணை பிறப்பிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *