• Fri. Apr 26th, 2024

தமிழகத்தின் மின்பற்றாக்குறையை போக்க வேண்டும்- ஓ.பி.எஸ்

ByA.Tamilselvan

Aug 20, 2022

தமிழகத்தின் மின்பற்றாக்குறையை போக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வம் அறிக்கை வெளியிட்டுள்ளார்.
மத்திய அரசிடம் பேசி தமிழகத்தின் மின்பற்றாக்குறையை போக்க துரித நடவடிக்கை எடுக்க வேண்டும் என
அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வம் தன்து அறிக்கை வாயிலாக கேட்டுக்கொண்டுள்ளார்.அதுகுறித்து
அறிக்கையில்….- தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் மின் பகிர்மானக் கழகம் உள்ளிட்ட இந்தியாவில் உள்ள 13 மின் பகிர்மானக் கழகங்கள் மின்சாரத்தை வாங்க அல்லது விற்பதற்கான எரிசக்தி பரிமாற்றச் சந்தையில் பங்கேற்க மத்திய அரசின் நிறுவனம் தடை விதித்து உள்ளது. இதற்குக் காரணம், தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் மின் பகிர்மானக் கழகம் மற்றும் தமிழ்நாடு மின்சார வாரியம் ஆகியவை இணைந்து 17-08-2022 வரை 926 கோடி ரூபாய் நிலுவைத் தொகையை மின் உற்பத்தி நிறுவனங்களுக்கு செலுத்தாததுதான் என்று மத்திய எரிசக்தி துறை அமைச்சகம் தெரிவித்துள்ளதாகவும் பத்திரிகைகளில் செய்திகள் வந்துள்ளன. இதுகுறித்து கருத்து தெரிவித்த மின்சாரத்துறை அதிகாரிகள், மின்சாரத்தின் தேவை தற்போது குறைந்து இருப்பதாகவும், காற்றாலை மூலம் தமிழ்நாட்டிற்கு போதுமான அளவுக்கு மின்சாரம் கிடைத்து வருவதாகவும், நிலுவைத் தொகையான 926 கோடி ரூபாயை செலுத்துவதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருவதாகவும், எனவே இதுகுறித்து பதற்றம் அடையத் தேவையில்லை என்றும் தெரிவித்துள்ளதாக செய்திகள் வந்துள்ளன. ஆனால், அமைச்சரோ 70 கோடி ரூபாய் தான் நிலுவைத் தொகை என்கிறார்! இருப்பினும், காற்றாலை மின்சாரம் என்பது முற்றிலும் வானிலையை, குறிப்பாக காற்றின் வேகத்தை பொறுத்து கிடைக்கக்கூடியது. கடந்த சில நாட்களாக காற்றாலை மூலம் பெறப்படும் மின்சாரம் குறைந்து கொண்டே வருவதாகவும், கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு காற்றாலை மூலம் 28.11 மில்லியன் யூனிட் மின்சாரம் பெறப்பட்ட நிலையில், மின்சாரத் தேவை என்பது 350 மில்லியன் யூனிட் என்ற அளவில் இருப்பதாகத் தகவல்கள் வருகின்றன. மின்சாரத் தேவை என்பது எந்த நேரத்திலும் அதிகரிக்கலாம் என்ற நிலையில், ஒரு நாட்டின் பொருளாதாரமே மின்சாரத்தை நம்பியுள்ள நிலையில், எரிசக்தி பரிமாற்றச் சந்தையில் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் மின் பகிர்மானக் கழகத்திற்கு விதிக்கப்பட்டுள்ள தடையை உடனடியாக நீக்க வேண்டிய பொறுப்பும், கடமையும் மாநில அரசுக்கு உண்டு. எனவே, முதல்-அமைச்சர் இதில் உடனடியாகத் தலையிட்டு, மின் உற்பத்தி நிறுவனங்களுக்குச் செலுத்த வேண்டிய தொகையை செலுத்தி, தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் மின் பகிர்மானக் கழகத்திற்கு விதிக்கப்பட்டு உள்ள தடையை நீக்கி, மின் பற்றாக்குறை ஏற்படக்கூடிய அபாயத்தை போக்கவும், வருங்காலங்களில் இது போன்ற சூழல் ஏற்படாமல் பார்த்துக் கொள்ளவும் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *