தமிழ்நாடு சட்டப்பேரவையில் 2025-26ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையை நிதியமைச்சர் தங்கம் தென்னரசு இன்று தாக்கல் செய்கிறார்.
தமிழ்நாட்டின் 2025-26 நிதியாண்டிற்கான நிதிநிலை அறிக்கை சட்டப்பேரவையில் இன்று தாக்கல் செய்யப்படுகிறது. இந்த நிதிநிலை அறிக்கையை இரண்டாவது முறையாக நிதியமைச்சர் தங்கம் தென்னரசு தாக்கல் செய்கிறார். அடுத்த ஆண்டு (2026) சட்டப்பேரவை தேர்தல் நடக்க உள்ள நிலையில், இந்த ஆட்சியின் கடைசி முழுமையான நிதிநிலை அறிக்கை இதுவென்பதால், பல முக்கிய அறிவிப்புகள் இன்று வெளியாகும் என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது.
இந்த நிதிநிலை அறிக்கையில் பொதுமக்கள், அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் என பல்வேறு தரப்பினரின் கோரிக்கைகள் நிறைவேறும் என்ற எதிர்பார்ப்பும் ஏற்பட்டுள்ளது. மகளிர் உரிமைத் தொகையையும், அதில் பயன்பெறும் பயனாளிகளின் எண்ணிக்கையையும் உயர்த்த வேண்டும் என்ற கோரிக்கை தொடர்ந்து முன்வைக்கப்படுகிறது. பழைய ஓய்வூதிய திட்டம் போன்ற கோரிக்கைகள் ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் சார்பில் வலியுறுத்தப்பட்டு வருகிறது. இந்தக் கோரிக்கைகளை நிதிநிலை அறிக்கையின் வாயிலாக தமிழ்நாடு அரசு நிறைவேற்றும் என்ற எதிர்பார்ப்பும் ஏற்பட்டுள்ளது.
நிதிநிலை அறிக்கையைத் தொடர்ந்து வேளாண் நிதிநிலை அறிக்கை நாளை (மார்ச் 15) தாக்கல் செய்யப்பட உள்ளது. இந்த அறிக்கையை வேளாண்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தாக்கல் செய்ய உள்ளார்.