• Sat. Jan 17th, 2026
WhatsAppImage2026-01-15at114305
previous arrow
next arrow
Read Now

தமிழக முதல்வர் நாளை மாலை உதகை வருகை..,

ByG. Anbalagan

Apr 4, 2025

நீலகிரி மாவட்ட மக்கள் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை வேண்டும் என்ற கோரிக்கை தொடர்ந்து விடுத்து வந்தனர். அதனையடுத்து உதகை அருகே உள்ள காக்கா தோப்பு பகுதியில் புதிய அரசு மருத்துவக் கல்லூரியும், மருத்துவமனையும் கட்டும் பணி நடைபெற்று வந்தது. இதில் மருத்துவக் கல்லூரி ஏற்கனவே திறக்கப்பட்ட நிலையில் மருத்துவமனை பணிகள் தொடர்ந்து நடைபெற்று வந்தது.

அனைத்து பணிகளும் நிறைவடைந்த நிலையில் ஞாயிற்றுக்கிழமை காலை தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின் திறந்து வைத்து மக்கள் பயன்பாட்டிற்கு வரவுள்ளது. அதற்காக நாளை மாலை முதலமைச்சர் மு க ஸ்டாலின் உதகைக்கு வர உள்ளார்.

மேட்டுப்பாளையத்தில் இருந்து கோத்தகிரி வழியாக உதகைக்கு வரும் அவர் தமிழக விருந்தினர் மாளிகையில் தங்குகிறார். அதனை தொடர்ந்து ஞயிற்று கிழமை காலை மருத்துவ கல்லூரி மருத்துவமனை திறப்பு விழா மற்றும் உதகை அரசு கலை கல்லூரி மைதானத்தில் நடைபெறும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் பங்கேற்கிறார்.

தமிழக முதல்வரின் வருகையை ஒட்டி மாவட்டத்தில் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளது. இதனிடையே முதல்வர் திறந்து வைக்க உள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் மாவட்ட ஆட்சியர் லட்சுமி பவ்யா தண்ணீரு, அரசு கொரடா கா.ராமச்சந்திரன், காவல் கண்காணிப்பாளர்,என் எஸ் நிஷா ஆகியோர் மருத்துவக் கல்லூரி மருத்துவர்களுடன் ஆய்வு மேற்கொண்டனர்.

அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் முதல்வர் பார்வையிடும் அறுவை சிகிச்சை அரங்குகள், பழங்குடியினருக்கான தனி வார்டுகள் உள்ளிட்ட இடங்களை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டனர். அதன் பின்பு செய்தியாளர்களிடம் பேசிய மாவட்ட ஆட்சியர்: அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையை நாளை மறுநாள் திறந்து வைக்க இருப்பதாகவும், அதனைத் தொடர்ந்து பல்வேறு திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுவதுடன், நடந்து முடிந்த பணிகளை திறந்து வைக்க இருப்பதாகவும் சுமார் 15 ஆயிரம் பயனாளிகளுக்கு 100 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்க இருப்பதாக தெரிவித்தார்.

அதனை தொடர்ந்து பேசிய காவல் கண்காணிப்பாளர் என். எஸ் நிஷா முதல்வரின் வருகையால் பல்வேறு மாவட்டங்களில் இருந்து உதகையில் 1000 க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடவுள்ளதாகவும் நகரில் ஒரு சில இடங்களில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட இருப்பதாகவும் எனவே பொது மக்கள் ஒத்துழைப்பு தர வேண்டும் என்றார்.

மேலும் முதல்வர் வருகையை ஒட்டி நீலகிரி மாவட்டத்தில் ட்ரோன்கள் பறக்க தடை விதிக்கபடுவதாகவும் முதல்வர் கலந்து கொள்ளும் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை நிகழ்ச்சி மற்றும் அரசு கலைக்கல்லூரி மைதானம் உள்ளிட்ட பகுதிகள் நாளை முதல் காவல் துறையின் முழு கட்டுப்பாட்டில் கொண்டுவரப்படும் என்று தெரிவித்தார்.