• Tue. Apr 16th, 2024

மண் மணத்தை பறைசாற்றிய தமிழ் திரைப்படங்கள்!

தமிழ் சினிமாவில், கிராமத்து கதைகளை சார்ந்து பல படங்கள் வெளியாகி, நல்ல வரவேற்பை பெற்றன! கிராமத்து மக்கள் மட்டும் அல்லாமல் நகரத்து மக்களும், ரசித்து பார்க்க வைத்த படங்கள் ஏராளம்! அதுதான் தமிழ் மண்ணுக்குரிய பெருமை.

அப்படிப்பட்ட படங்களைக் கொண்டு வருவதில் முதன்மையானவர் ‘இயக்குனர் இமயம்’ பாரதிராஜா.. இவரது மண் வாசனை முதலான கிராமம் சார்ந்த படங்களான பதினாறு வயதினிலே, முதல் மரியாதை, கிழக்கே போகும் ரயில், காதல் ஓவியம், கிழக்குச்சீமையிலே என அனைத்தும் நல்ல வரவேற்பை பெற்றவை!

இவரைப்போலவே இன்னும் சில இயக்குனர்களின் படங்களும் மண்வாசனையைப் பரப்பும் விதத்தில் இருந்தன. அப்படங்கள் குறித்தான ஒரு பார்வை!

வேதம் புதிது
1987ல் வெளியான படம், வேதம் புதிது! ‘இயக்குனர் இமயம்’ பாரதிராஜா இயக்கிய இப்படத்தில், சத்யராஜ், அமலா, சாருஹாசன், ராஜா, நிழல்கள் ரவி, ஜனகராஜ் என பலர் நடித்துள்ளனர். தேவேந்திரன் இசையில், இப்படத்தில் இடம்பெற்ற கண்ணுக்குள் நூறு நிலவா இது ஒரு கனவா பாடல் பார்ப்போரையும், ரசிகர்களின் மனதை லயிக்க செய்தது! உணர்ச்சிகரமான வசனங்களைக் கொண்ட இந்தப் படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றது. படத்தின் மாறுபட்ட கதை அம்சத்திற்காக சிறந்த திரைப்படத்திற்கான தேசிய விருதும் கிடைத்தது, குறிப்பிடத்தக்கது!

பகல் நிலவு
கிராமிய மணம் கமழும் இப்படம், அந்நாட்களில் இளைஞர்களின் காதல் படங்களின் வரிசையில் இடம்பெற்றது! தமிழ் சினிமாவில், மணிரத்னத்தின் முதல் படம் இது! 1985ல் வெளியான இப்படத்தில், முரளி, ரேவதி, சரத்பாபு, கவுண்டமணி, நிழல்கள் ரவி, ராதிகா உள்பட பலர் நடித்துள்ளனர். இப்படத்தின் இசை அமைப்பாளர் இளையராஜா. மைனா, மைனா, நீ அப்போது, பூ மாலையே தோள் சேர வா, பூவிலே மேடை, வாரோயோ வான்மதி, வைதேகி ராமன் ஆகிய பாடல்கள் அப்போதைய ஹிட்!

சுவரில்லாத சித்திரங்கள்
கே.பாக்யராஜின் இயக்கத்தில் கிராமிய மணம் வீசும் படம், இது! கங்கை அமரனின் இசையில் பாடல்கள் அனைத்தும் சூப்பர் ஹிட்! சுதாகர், சுமதி, கவுண்டமணி உள்பட பலரும் நடித்துள்ளனர். ஆடிடும் ஓடமாய், காதல் வைபோகமே, வெல்கம் ஆகிய பாடல்கள் இப்படத்தில் உள்ளன. கவுண்டமணியின் நகைச்சுவைக் காட்சிகள் படத்தில் பெரிதும் பேசப்பட்டன!

உதிரிப்பூக்கள்
மகேந்திரன் இயக்கிய இப்படம், இன்றளவும் அதிகம் பேசப்படும் வகையில் உள்ளது! மாறுபட்ட கோணத்தில்
1979ல் வெளியான படத்தில் சரத்பாபு, அஸ்வினி, சுந்தர், விஜயன் நடித்திருந்தனர்! இசைஞானி இளையராஜாவின் இன்னிசையில், அழகிய கண்ணே, நான் பாட, கல்யாணம் பாரு, போடா போடா, ஏ இந்த பூங்காத்து ஆகிய பாடல்கள் அனைத்தும் செம ஹிட்..

தெய்வ வாக்கு
1992ல் வெளியான இப்படத்தை எம்.எஸ்.மாது இயக்கினார். இளையராஜாவின் இன்னிசையில் பாடல்கள் அனைத்தும் சூப்பர் ஹிட். இப்போது கேட்டாலும் நம்மை தலையாட்ட வைக்கும். கார்த்திக், ரேவதி இணைந்து நடித்த பல ஹிட்டான படங்களில் இதுவும் ஒன்று. இவர்களோடு, விஜயகுமார், ஸ்ரீவித்யா, ராதாரவி, செந்தில், யுவஸ்ரீ என பலர் நடித்துள்ளனர். அருள்வாக்கு சொல்லும் பெண்ணுக்கும், குடிகார இளைஞனுக்கும் இடையேயான காதல்! அந்த காதல் வெற்றி பெற்றதா என்பதே கதை! சுத்துதடி ராக்கோழி, இந்த அம்மனுக்கு எந்த ஊரு, ஊரெல்லாம் சாமியாக, ஒரு பாட்டாலே சொல்லி, வள்ளி வள்ளி ஆகிய பாடல்கள், இன்றும் பலரது பிலே லிஸ்டில் இடம்பெற்றுள்ளன!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *