மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் சிகிச்சைக்கு வந்த இளம்பெண்ணிற்கு மருத்துவர் பாலியல் தொல்லை கொடுத்ததாக புகார்: மருத்துவக் கல்வி இயக்குனரகத்திற்கு அறிக்கை அனுப்பப்பட்டுள்ள நிலையில் சஸ்பெண்ட்
மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு கடந்த நவம்பர் 26 ஆம் தேதி அன்று 26 வயது இளம்பெண் ஒருவர் ரேடியாலஜி ஆய்வகத்தில் அல்ட்ரா சவுண்ட் ஸ்கேன் எடுக்க வந்துள்ளார். அன்று அவருக்கு ஸ்கேன் எடுக்க முடியாது எனக்கூறி மறுநாள் வருமாறு அனுப்பியுள்ளார் ரேடியாலஜி மருத்துவர். மறுநாள் (நவ.27) அன்று வந்த அந்த இளம்பெண்ணை ஆய்வகத்திற்குள் அழைத்து சென்றவர், ஆய்வகத்தில் இருந்த செவிலியரை வெளியே அனுப்பியுள்ளார்.

பின்னர் சிறிது நேரத்தில் ஆய்வகத்தில் இருந்து அழுதுகொண்டே வெளியே வந்த இளம்பெண், அவரது தாயாரிடம், ஸ்கேன் செய்ய அழைத்து சென்ற மருத்துவர் அவருக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக தெரிவித்துள்ளார். அவரது தாயார் உடனடியாக இந்த விவகாரத்தை துறை தலைவர் மற்றும் மருத்துவமனை டீன் ஆகியோரிடம் புகாரளித்துள்ளார். அதனடிப்படையில், மருத்துவமனை வளாக மருத்துவ அதிகாரி ஒருவரை அந்த புகாரை விசாரிக்க நியமித்தனர்.
அவர் அந்த புகாரை விசாரித்து சம்பவ இடத்தில் இருந்த செவிலியரிடம் நடந்த சம்பவம் குறித்து அறிக்கை அளிக்குமாறு அறிவுறுத்தி உள்ளார். அந்த அறிக்கை மருத்துவக்கல்வி இயக்குனரகத்திற்கு அனுப்பி வைத்துள்ளார்.
இந்த விவகாரம் குறித்து மருத்துவமனை டீன் ரத்தினவேலிடம் விளக்கம் கேட்டதற்கு,
சம்பந்தப்பட்ட இளம்பெண்ணுக்கு ஸ்கேன் எடுப்பதில் தாமதம் செய்து அலைக்கழிப்பு செய்ததாகவே புகார் உள்ளதாகவும், அது தொடர்பாக துறை தலைவரை விசாரிக்க உத்தரவிட்டு உள்ளதாகவும், செவிலியரின் அறிக்கை அரசுக்கு அனுப்பப்பட்டு உள்ளதாகவும் பதில் அளித்தார்.