• Fri. Apr 26th, 2024

திருச்செந்தூரில் நாளை சூரசம்ஹார நிகழ்ச்சி

ByA.Tamilselvan

Oct 29, 2022

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் கந்தசஷ்டி திருவிழாவின் சிகர நிகழ்ச்சியாக நாளை, சுவாமி ஜெயந்திநாதர் சூரபத்மனை வதம் செய்யும் சூரசம்ஹார நிகழ்ச்சி நடக்கிறது.
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் கந்தசஷ்டி திருவிழா கடந்த 25-ம் தேதி யாகசாலை பூஜையுடன் தொடங்கியது. 4-ம் நாளான நேற்று அதிகாலையில் நடைதிறக்கப்பட்டு, விசுவரூப தீபாராதனை, உதயமார்த்தாண்ட அபிஷேகம் நடந்தது. காலையில் உச்சிகால அபிஷேகம், தீபாராதனையை தொடர்ந்து யாகசாலையில் சுவாமி ஜெயந்திநாதர், வள்ளி-தெய்வானைக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரமாகி தீபாராதனை நடைபெற்றது
மதியம் சுவாமி ஜெயந்திநாதர், வள்ளி-தெய்வானையுடன் சண்முகவிலாச மண்டபத்தில் எழுந்தருளினார். மாலையில் திருவாவடுதுறை ஆதீன கந்தசஷ்டி மண்டபத்தில் எழுந்தருளிய சுவாமி-அம்பாள்களுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்கார தீபாராதனை நடைபெற்றது. இரவில் சுவாமி-அம்பாள்களுடன் தங்க ரதத்தில் எழுந்தருளி கிரிவீதி வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். விழாவின் சிகர நிகழ்ச்சியான சூரசம்ஹாரம் 6-ம் நாளான நாளை (அக்.30-ம் தேதி) மாலையில் நடைபெறுகிறது. இதனை முன்னிட்டு, அன்று அதிகாலை 1 மணிக்கு நடைதிறக்கப்பட்டு, விசுவரூப தீபாராதனை, உதயமார்த்தாண்ட அபிஷேகம் நடக்கிறது. காலை 9 மணிக்கு உச்சிகால அபிஷேகம், மதியம் 1 மணிக்கு சாயரட்சை தீபாராதனை நடைபெறுகிறது. மாலை 4 மணியளவில் கடற்கரையில் சுவாமி ஜெயந்திநாதர் சூரபத்மனை வதம் செய்யும் சூரசம்ஹார நிகழ்ச்சி நடக்கிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *