

வருகிற நாடாளுமன்றத் தேர்தலில், தமிழ்நாட்டைச் சேர்ந்த தமிழரை பிரதமர் வேட்பாளராக அறிவித்தால் நான் ஆதரவு அளிப்போம் என மதுரை ஆதீனம் தெரிவித்துள்ளார்.
இது குறித்து, மதுரையில் செய்தியாளர்களிடம் அவர் நேற்று கூறியதாவது: இந்தியாவில் 3-வது முறையாக மோடியே பிரதமராக வாய்ப்புள்ளது. அவருடைய தமிழ் உணர்வு அதற்குப் பயன்படும். அவர் இலங்கைத் தமிழர்களுக்கு வீடு கட்டிக் கொடுத்ததைப் பாராட்டும் நோக்கில்தான் செங்கோல் கொடுத்தேன். அதேநேரத்தில், தமிழர் பிரதமராக வேண்டும். தமிழ்நாட்டையும் தமிழரே ஆள வேண்டும். இந்தியாவையும் தமிழர்கள் ஆளலாம். தமிழ்நாட்டிலிருந்து யாரை வேட்பாளராக அறிவித்தாலும் அவரை ஆதரிப்போம். நான் எந்த அரசியல் கட்சியின் பிரச்சாரத்துக்கும் போக மாட்டேன். யார் வந்தாலும் வாழ்த்து கூறுவேன்.
பிரதமர்மோடி திருக்குறள், தேவாரத்தை விரும்பிக் கேட்பவர். உலகம் முழுவதும் திருக்குறளின் பெருமையைக் கொண்டுசெல்கிறார். மோடி தமிழர்களுக்கு விரோதமானவர் அல்ல. ஆதீன மடாதிபதியாக இருப்பது முள்மேல் இருப்பதுபோல உள்ளது. இவ்வாறு மதுரை ஆதீனம் மதுரை ஞானசம்பந்த தேசிக பரமாச்சார்ய சுவாமிகள் கூறினார்.
