

உத்திரமேரூர் அடுத்த, சிலாம்பாக்கம் கிராமத்தில் பாயும் செய்யாற்றின் குறுக்கே, ஒரு ஆண்டுக்குள் புதிய அணை கட்ட திட்டமிடப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
செய்யாற்றின் குறுக்கே புதிதாக அணை கட்ட, தமிழக நீர்வளத் துறை, 35 கோடி ரூபாய் ஒதுக்கியுள்ளது. இதற்கான ‘டெண்டர்’ பணிகள் முடிந்து, கடந்த மே மாதம், அணைக்கட்டுக்கான பூமி பூஜை போடப்பட்டது. இதையடுத்து, ஆற்றின் குறுக்கே, அணைக்கட்டுக்கு தேவையான அஸ்திவாரம் அமைக்க, மணல் அகற்றுவது, கட்டுமான பொருட்களை இறக்குவது போன்ற பணிகள் துவங்கி உள்ளன. அணைக்கட்டு, 1. 8 மீட்டர் உயரமும், 480 மீட்டர் நீளமும் கொண்டதாக கட்டப்பட உள்ளது.
செய்யாற்றில் வெள்ளப் பெருக்கு ஏற்படும் போது, இந்த அணைக்கட்டு வாயிலாக, சுற்றியுள்ள ஏரிகளுக்கு, நீரை திருப்பி விடுவதன் வாயிலாக, சிலாம்பாக்கம், மாகரல், ஒழுகரை போன்ற கிராமங்களில் உள்ள, 1, 600 ஏக்கர் விவசாய நிலங்கள் பயன்பெறும் என, நீர்வளத் துறையினர் தெரிவித்துள்ளனர்.
