கோடைவிழா மற்றும் மலர் கண்காட்சியை முன்னிட்டு கொடைக்கானலுக்கு ஏராளமான சுற்றுலா பயணிகள் குவிந்து வருகின்றனர்.
தமிழ்நாடு அரசு சுற்றுலாத்துறை மற்றும் தோட்டக்கலை-மலைப்பயிர்கள் துறையின் சார்பில் திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் பிரையண்ட் பூங்காவில் நடப்பு ஆண்டிற்கான கோடைவிழாவின் தொடக்கவிழா நாளை (26ம் தேதி) அன்று காலை 11 மணியளவில் மாவட்ட கலெக்டர் பூங்கொடி தலைமையில் நடைபெறவுள்ளது. கோடை விழாவை ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் இ.பெரியசாமி தொடங்கி வைக்கிறார்.. தொடர்ந்து வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் மலக்கண்காட்சியினையும், சுற்றுலாத்துறை அமைச்சர் கா.ராமச்சந்திரன் கலைநிகழ்ச்சிகளையும், உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் அர.சக்கரபாணி கண்காட்சி அரங்கினையும் தொடங்கி வைத்து சிறப்புரையாற்றவுள்ளனர். திண்டுக்கல் பாராளுமன்ற உறுப்பினர் வேலுச்சாமி, பழனி சட்டமன்ற உறுப்பினர் இ.பெ.செந்தில்குமார் ஆகியோர் முன்னிலை வகிக்கவுள்ளனர்.
கொடைக்கானல் பிரையண்ட் பூங்காவில் நடைபெறும் இவ்விழாவில் நாளை முதல் வருகிற 28ம் தேதி வரை 3 நாட்கள் தோட்டக்கலைத்துறை மூலமாக மலர்க்கண்காட்சியும், 26ம் தேதி முதல் ஜூன் 2ம் தேதி வரை 8 நாட்கள் சுற்றுலாத்துறை மூலமாக மங்கள இசை, பரதம், தப்பாட்டம், ஒயிலாட்டம், தெம்மாங்கு இசை, பட்டிமன்றம், ஆடல்-பாடல், பலகுரல் நிகழ்ச்சி, இன்னிசை நிகழ்ச்சி உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்படவுள்ளன. 28ம் தேதி அன்று பட்டிமன்றம் நிகழ்ச்சியும், 30ம் தேதி அன்று படகு போட்டி நிகழ்ச்சியும், 31ம் தேதி அன்று கால்நடைத்துறை மூலம் நாய்கள் கண்காட்சி உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்படவுள்ளன. கொடைக்கானலுக்கு ஏராளமான சுற்றுலா பயணிகள் குவிந்து வருவதால் நகரமே விழாக்கோலம் பூண்டுள்ளது.