• Tue. Nov 25th, 2025
WhatsApp Image 2025-11-21 at 00.09.45 (6)
previous arrow
next arrow
Read Now

மகாராஷ்டிரா அரசியலில் திடீர் திருப்பம்..,
சிவசேனா அதிருப்தி எம்.எல்.ஏ ஏக்நாத்ஷிண்டே முதல்வராகப் பதவியேற்றார்..!

Byவிஷா

Jul 1, 2022

மகாராஷ்டிராவின் புதிய முதல்வராக சிவசேனா அதிருப்தி எம்.எல்.ஏ ஏக்நாத் ஷிண்டே முதலமைச்சராகப் பதவியேற்றுக் கொண்டார். துணை முதல்வராக பா.ஜ.க.,வைச் சேர்ந்த தேவேந்திர ஃபட்னாவிஸ் பதவியேற்றுக் கொண்டார். இருவருக்கும் ஆளுநர் பகத் சிங் கோஷ்யாரி இவர்களுக்கு பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.
முன்னதாக, மகாராஷ்டிராவில் ஆட்சி அமைக்க உரிமை கோரிய பின்னர், செய்தியாளர் சந்திப்பில் பேசிய பா.ஜ.க தலைவர் தேவேந்திர ஃபட்னாவிஸ், மகாராஷ்டிராவின் முதல்வராக ஏக்நாத் ஷிண்டேவை அறிவித்தார்.
மகாராஷ்டிராவில் நிலவும் அரசியல் நெருக்கடிக்கு இடையில் பா.ஜ.க தலைவர் தேவேந்திர ஃபட்னாவிஸ் மற்றும் சிவசேனா அதிருப்தி எம்.எல்.ஏ.,க்கள் குழுவின் தலைவர் ஏக்நாத் ஷிண்டே ஆகியோர் ராஜ்பவனில் ஆளுநர் பகத் சிங் கோஷ்யாரியை சந்தித்தனர், அப்போது அவர்கள் மகாராஷ்டிராவில் ஆட்சி அமைக்க உரிமை கோரினர்.
பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்தப்போது, பா.ஜ.க.,வை ஆட்சியில் இருந்து விலக்கி வைக்க 2019ல் காங்கிரஸ் மற்றும் என்.சி.பி.,யுடன் சிவசேனா கைகோர்த்ததன் மூலம், மக்கள் தீர்ப்பை சிவசேனா அவமதித்துவிட்டதாக தேவேந்திர ஃபட்னாவிஸ் கூறினார். மேலும், மஹா விகாஸ் அகாடி அரசாங்கத்தின் ஆட்சியின் போது, ஊழல் குற்றஞ்சாட்டப்பட்ட இரண்டு என்.சி.பி தலைவர்களை மேற்கோள் காட்டி, ஊழல் பெருகிவிட்டதாகவும் அவர் கூறினார்.
மேலும், ஏக்நாத் ஷிண்டேவும் அவரது ஆதரவாளர்களும் காங்கிரஸ் மற்றும் என்.சி.பி.,யுடன் தொடர்வதில்லை என்ற வலுவான நிலைப்பாட்டை எடுத்தனர். இந்துத்துவா விஷயத்தில் சமரசம் செய்து கொள்ள அவர்கள் தயாராக இல்லை. எம்.வி.ஏ வீழ்ந்தால் மாற்று அரசை வழங்குவோம் என்று நாங்கள் எப்போதும் கூறி வந்தோம் என்றும் ஃபட்னாவிஸ் கூறினார்.

இதற்கிடையில், ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான அமைச்சகத்தின் ஒரு பகுதியாக இருக்க மாட்டேன், ஆனால் வெளியில் இருந்து அனைத்து ஆதரவையும் வழங்குவேன் என்றும் தேவேந்திர ஃபட்னாவிஸ் கூறியுள்ளார்.
மேலும், ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான குழுவை பா.ஜ.க ஆதரிப்பதாகவும், ஆட்சியின் சுமூகமான செயல்பாட்டிற்கான பொறுப்பை ஏற்போம் என்றும் ஃபட்னாவிஸ் கூறினார். கூடுதலாக, நரேந்திர மோடியின் வளர்ச்சிப் பார்வையை முன்னெடுத்துச் செல்வோம் என்றும் ஃபட்னாவிஸ் கூறினார்.
பத்திரிக்கையாளர் சந்திப்பில் பேசிய ஏக்நாத் ஷிண்டே, 106 எம்.எல்.ஏ.,க்கள் மற்றும் சுயேட்சைகளுடன் பா.ஜ.க.,வுக்கு 120 எம்.எல்.ஏ.,க்களின் ஆதரவு உள்ளது என்றும், பா.ஜ.க விரும்பினால் முதல்வர் பதவியில் அவர்களே இருந்திருக்க முடியும் என்றும் கூறினார். மேலும், பிரதமர் நரேந்திர மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா மற்றும் தேவேந்திர ஃபட்னாவிஸ் ஆகியோருக்கு எனது ஆழ்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன் என்றும் ஏக்நாத் ஷிண்டே கூறினார்.
இந்தநிலையில், மகாராஷ்டிரா முதல்வராக பதவியேற்றார் சிவசேனா அதிருப்தி எம்.எல்.ஏ ஏக்நாத் ஷிண்டே. துணை முதல்வராக பா.ஜ.க.,வைச் சேர்ந்த தேவேந்திர ஃபட்னாவிஸ் பதவியேற்றுக் கொண்டார். ஆளுநர் பகத் சிங் கோஷ்யாரி இவர்களுக்கு பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். இவர்களுக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
மகாராஷ்டிரா அமைச்சரவையில் பங்கேற்க மாட்டேன் என தேவேந்திர ஃபட்னாவிஸ் அறிவித்திருந்த நிலையில், பா.ஜ.க தலைவர் ஜெ.பி.நட்டா மற்றும் உள்துறை அமைச்சர் கூறியதையடுத்து, துணை முதல்வராக பதவியேற்றுக் கொண்டார்.
முன்னதாக, ஏக்நாத் ஷிண்டே இன்று கோவாவில் இருந்து மும்பை வந்தார். அவருக்கு இசட் பிரிவு பாதுகாப்பு மத்திய அரசால் வழங்கப்பட்டது. இதற்கிடையில், அதிருப்தி எம்.எல்.ஏ.,க்கள் கோவாவில் தங்கியுள்ளனர், உத்தவ் தாக்கரே ராஜினாமா செய்ததைத் தொடர்ந்து அவர்கள் புதன்கிழமை அசாமில் இருந்து அங்கு வந்தனர். இன்று காலை ட்வீட் செய்த ஏக்நாத் ஷிண்டே, அமைச்சர் பதவிகள் குறித்து பா.ஜ.க.,வுடன் இன்னும் விவாதம் நடத்தவில்லை, ஆனால் விரைவில் அது நடக்கும் என்று கூறினார். அதுவரை எந்த வதந்திகளையும் நம்ப வேண்டாம் என்றும் அவர் கூறினார்.