உசிலம்பட்டி 58 கால்வாய் தொட்டிபாலம் அருகில் அமைந்துள்ள கல்குவாரியால் தொட்டி பாலத்திற்கு ஏற்படும் பாதிப்புகள் குறித்து அண்ணா பல்கலைக்கழக நிபுணர் குழுவினர் நேரில் ஆய்வு மேற்கொண்டனர்.
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி 58 கிராம பாசன கால்வாய் தொட்டிப்பாலம், ஆசிய கண்டத்தின் இரண்டாவது நீர் செல்லும் மிக நீளமான தொட்டி பாலம் என்ற பெருமை பெற்றது.
![](https://arasiyaltoday.com/wp-content/uploads/2024/12/WhatsApp-Image-2024-12-06-at-7.43.53-PM-1-1.jpeg)
இந்த தொட்டி பாலம் அருகிலேயே கடந்த ஆண்டு கல் குவாரி அமைத்து பாறைகளை வெட்டி எடுக்க அனுமதி அளிக்கப்பட்டு, அதில் வெடிக்கப்படும் வெடியால் தொட்டி பாலத்திற்கு பாதிப்பு ஏற்படுவதாக விவசாய சங்கங்கள், அரசியல் கட்சியினர் குற்றம் சாட்டி நடத்திய பல்வேறு போராட்டங்களின் எதிரொலியாக கல் குவாரி உரிமம் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டது.
![](https://arasiyaltoday.com/wp-content/uploads/2024/12/WhatsApp-Image-2024-12-06-at-7.43.53-PM-2.jpeg)
இந்நிலையில் இந்த குவாரியை மீண்டும் நடத்த அனுமதி வழங்க கோரி ஒப்பந்தம் எடுத்த சுசிலா என்பவர் தாக்கல் செய்த மனுவின் அடிப்படையில் குவாரியையும், தொட்டிப்பாலத்தையும் ஆய்வு செய்து அறிக்கை சமர்பிக்க உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
![](https://arasiyaltoday.com/wp-content/uploads/2024/12/WhatsApp-Image-2024-12-06-at-7.43.52-PM.jpeg)
இதன் அடிப்படையில் இன்று முதல் நான்கு நாட்கள் குவாரி அமைந்துள்ள பகுதி மற்றும் தொட்டி பால பகுதிகளில் அண்ணா பல்கலைக்கழக புவியியல் மற்றும் சுரங்கத்துறை தலைவர் பாலமாதேஸ்வரன் தலைமையிலான நிபுணர் குழுவினர் ஆய்வு நடத்தினர்.
![](https://arasiyaltoday.com/wp-content/uploads/2024/12/WhatsApp-Image-2024-12-06-at-7.43.52-PM-1.jpeg)
பொதுப்பணித்துறை, குண்டாறு வடிகால்த்துறை அதிகாரிகள் மற்றும் விவசாயிகள் முன்னிலையில் நடைபெற்ற இந்த ஆய்வில் குவாரியில் வெடிக்கப்பட்டுள்ள வெடிகள், வெடிகள் வெடித்தால் எந்த அளவில் எவ்வாறு வெடி வெடிக்க வைக்க வேண்டும் என செய்முறையுடன் ஆய்வு நடத்தப்பட்டது, இந்த ஆய்வு முடிவுகள் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் சமர்பிக்கப்படும் எனவும், குவாரி நடத்தவும், அதனால் தொட்டிபாலத்திற்கு ஆபத்து உள்ளதா என்பது குறித்து நீதிபதிகள் முடிவு எடுப்பார்பள் என தெரிவிக்கப்பட்டது.