பெண் ஆசிரியரைத் தாக்கிய மாணவர்களிடம் இருந்து பாதுகாப்பு அளிக்க வேண்டும் எனக் கோரி திண்டுக்கல் மாவட்டத்தில் முதன்மைக் கல்வி அலுவலகத்தை ஆசிரியர்கள் முற்றுகையிட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திண்டுக்கல் அருகே பெண் ஆசிரியை மீது தாக்குதலில் ஈடுபட்ட மாணவிகள் மீது நடவடிக்கை வேண்டும் என வலியுறுத்தி பள்ளிக்குச் செல்ல மறுத்த ஆசியர்கள் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.
திண்டுக்கல் மாவட்டம், கோவிலூரை அடுத்த ராமநாதபுரத்தில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் கோவிலூர் சுற்றுப் பகுதிகளைச் சேர்ந்த 1,000க்கும் மேற்பட்ட மாணவர்கள் பயின்று வருகின்றனர். இப்பள்ளியில் 40 ஆசிரியர்கள் பணியாற்றி வருகின்றனர். 2021-22ஆம் கல்வி ஆண்டின் தொடக்கத்தில், பெற்றோர் ஆசிரியர் கழக நிதி கட்டணம் தொடர்பாக இப்பள்ளி மாணவர்களை உடற்கல்வி ஆசிரியர் முனியப்பன் தூண்டிவிட்டதாகக் கூறப்படுகிறது. அதன்பேரில், 11, 12ஆம் வகுப்பு மாணவர்களில் ஒரு பிரிவினர் புதன்கிழமை வகுப்பு தொடங்கியதும் சாலை மறியலில் ஈடுபட்டுள்ளனர்.
அப்போது 11ஆம் வகுப்புக்குள் நுழைந்த சில மாணவிகள் போராட்டத்தில் கலந்துகொள்ள வற்புறுத்தியதாக் கூறப்படுகிறது. இதனைக் கண்டித்த பெண் ஆசிரியரை மாணவிகள் 5 பேர் தாக்கியதாகக் கூறப்படுகிறது. இதுகுறித்து அந்த ஆசிரியர் தலைமை ஆசிரியரிடம் புகார் அளித்துள்ளார். போராட்டம் குறித்து தகவலறிந்த எரியோடு போலீஸார் சம்பவ இடத்துக்குச் சென்று மாணவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி பள்ளிக்கு அனுப்பிவைத்தனர்.இதனை தொடர்ந்து, பள்ளி ஆசிரியர்கள் உடற்கல்வி ஆசிரியர் மீதும், தாக்குதலில் ஈடுபட்ட மாணவிகள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கோரி மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலரிடம் முறையிட்டனர்.
மேலும், மாணவிகள் மூலம் பாலியல் புகார் அளித்துவிடுவதாக ஆண் ஆசிரியர்களையும், உறவினர்களைக் கொலை செய்துவிடுவதாக மிரட்டுவதாகவும், வன்கொடுமை சட்டத்தின் கீழ் புகார் அளித்துவிடுவதாகவும் உடற்கல்வி ஆசிரியர் முனியப்பன் தொடர்ந்து மிரட்டுவதாக ஆசிரியர்கள் புகார் கொடுத்தனர். உடற்கல்வி ஆசிரியர்
முனியப்பனை பணியிட மாற்றம் செய்ய வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்தனர். இதையடுத்து, முதன்மைக் கல்வி அலுவலர், எழுத்துப்பூர்வமாக மனு அளிக்கும்படி அறிவுறுத்தினார். அதன்பேரில், ஆசிரியர்கள் அனைவரும் தனித்தனியே புகார் மனு அளித்தனர். ஆனால், வியாழக்கிழமை காலை வரை எந்த நடவடிக்கையும் எடுக்காததால், பள்ளிக்கு செல்ல மறுத்த ஆசிரியர்கள் மாவட்ட முதன்மை கல்வி அலுவலகத்தை முற்றுகையிட்டனர். பள்ளியின் தலைமையாசிரியர், உடற்கல்வி ஆசிரியர் முனியப்பன் உள்ளிட்ட 4 ஆசிரியர்கள் மட்டுமே பள்ளிக்கு சென்றனர். இதனால் ஏதுவும் அசம்பாவிதங்கள் நிகழாமல் இருக்க, போலீஸார் பள்ளிக்குச் சென்று பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
இதனால் பள்ளிகளில் வகுப்புகள் எடுக்க ஆசிரியர் இல்லாமல் வகுப்புகள் பாதிக்கப்பட்டது. மேலும் 10, 11 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு செய்முறைத் தேர்வு நடைபெற்று வரும் நிலையில், தலைமையாசிரியர் அதற்கு மட்டுமே முக்கியத்துவம் அளித்து தேர்வுகளை நடத்தினார். இதனிடையே மாவட்ட முதன்மை கல்வி அலுவலர், முற்றுகையில் ஈடுபட்ட ஆசிரியர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். ஆசிரியரைத் தாக்கிய மாணவியை இடைநீக்கம் செய்வதாகவும், உடற்கல்வி ஆசிரியர் மீது துறை ரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் உறுதி அளித்ததையடுத்து ஆசிரியர்கள் பள்ளிக்குச் சென்றனர்.