சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் தேர்வுக் கட்டணம் 50 சதவீதம் உயர்த்தியுள்ளதால் மாணவர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
அதன்படி, இளநிலை பொறியியல் படிப்பு தேர்வுகளுக்கு ஒரு தாளுக்கான தேர்வுக்கட்டணம் ரூ.150-ஆக இருந்த நிலையில், தற்போது ரூ.225-ஆக உயர்த்தப்பட்டுள்ளது. இளநிலை செய்முறை சமர்ப்பிப்புக்கு ரூ.300-ஆக இருந்த தேர்வுக்கட்டணம் தற்போது ரூ.450-ஆக உயர்த்தப்பட்டுள்ளது. முதுநிலை பொறியியல் மாணவர்களுக்கான தேர்வு செய்முறைக்கு ரூ.450-ஆக இருந்த தேர்வு கட்டணம் ரூ.650-ஆகவும், இதுபோன்று முதுநிலை மாணவர்களுக்கான ஆய்வு கட்டுரை (ஒரு தாளுக்கு) சமர்ப்பிப்புக்கு ரூ.600-ஆக இருந்த கட்டணம் ரூ.900-ஆகவும் உயர்த்தப்பட்டுள்ளது.
மேலும், அண்ணா பல்கலைக்கழகத்தின் இளநிலை, முதுநிலை பொறியியல் படிப்புக்கான டிகிரி உள்ளிட்ட சான்றிதழ்கள் பெறுவதற்கான கட்டணம் ரூ.1,000 லிருந்து ரூ.1,500-ஆக உயர்த்தப்பட்டுள்ளது என பல்கலைகழக நிர்வாகம் அறிவித்துள்ளது. இந்த 50சதவீதம் தேர்வுக் கட்டணம் உயர்வுக்கு அண்ணா பல்கலைக்கழக சிண்டிகேட் குழு ஒப்புதல் அளித்துள்ளதாகவும் கூறப்படுகிறது.
இதற்கிடையே தேர்வுக் கட்டண உயர்வைத் திரும்பப் பெற வேண்டும் என்று மாணவர்கள் கோரிக்கை விடுத்து, வலியுறுத்தி வருகின்றனர். ஒரு செமஸ்டருக்கு 9 தாள்கள் தேர்வு எழுத வேண்டி உள்ளதால் ரூ.2050 கட்ட வேண்டிய சூழல் உருவாகியுள்ளது. இந்தத் தேர்வுக் கட்டண உயர்வால், மாணவர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.