• Wed. Nov 19th, 2025
WhatsApp Image 2025-11-13 at 17.55.58
previous arrow
next arrow
Read Now

மாணவி லாவண்யா உடலை அடக்கம் செய்ய வேண்டும்:ஐகோர்ட் கிளை உத்தரவு..!

தற்கொலை செய்துகொண்ட மாணவி லாவண்யாவின் உடலை பெற்றோர் பெற்று அடக்கம் செய்ய வேண்டும் என மதுரை ஐகோர்ட் கிளை உத்தரவிட்டுள்ளது. தஞ்சை மாவட்டம் திருக்காட்டுப்பள்ளி அருகே உள்ள மைக்கேல்பட்டி தூய இருதய மேல்நிலைப்பள்ளியில் 12-ம் வகுப்பு படித்து வந்த லாவண்யா (17) என்ற மாணவி விஷம் குடித்து தற்கொலை செய்த சம்பவம் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது.

பள்ளியில் உள்ள விடுதியில் தங்கி படித்து வந்த லாவண்யாவை, மதம் மாறும்படி கூறி வற்புறுத்தியதாலும், தொடர்ந்து தொந்தரவு கொடுத்ததாலும் அவர் தற்கொலை செய்துகொண்டுள்ளார். இதுதொடர்பாக லாவண்யா பேசிய வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி உள்ளது.

லாவண்யா கொடுத்த வாக்குமூலத்தின் அடிப்படையில் திருக்காட்டுப்பள்ளி போலீஸ் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்து, விடுதி வார்டன் சகாயமேரி (62) என்பவரை போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மாணவி லாவண்யாவின் உடல் பரிசோதனை முடிந்து மருத்துவக் கல்லூரி பிணவறையில் வைக்கப்பட்டுள்ளது. பள்ளி நிர்வாகத்தின் மீது உரிய நடவடிக்கை எடுத்தால்தான் உடலை பெற்றுக்கொள்வோம் என்று பெற்றோர் அறிவித்து விட்டனர். இதனால், கடந்த 2 நாட்களாக உடலை ஒப்படைக்க முடி யாமல் போலீசார் தவித்து வருகிறார்கள்.

இந்நிலையில், இந்த வழக்கை சிபிசிஐடி விசாரிக்க உத்தரவிடக்கோரி மாணவியின் தந்தை முருகானந்தம் சென்னை உயர்நீதிமன்றம் மதுரை கிளையில் வழக்கு தொடர்ந்துள்ளார். இதனை விசாரணைக்கு ஏற்றுக் கொண்ட நீதிபதி, திங்கட்கிழமை அன்று வழக்கை பட்டியலிட பதிவாளருக்கு உத்தரவிட்டுள்ளார்.

அத்துடன், தற்கொலை செய்துகொண்ட மாணவி லாவண்யாவின் உடலை பெற்றோர் பெற்று அடக்கம் செய்ய வேண்டும் என மதுரை ஐகோர்ட் கிளை உத்தரவிட்டுள்ளது.