• Fri. Jan 17th, 2025

கரும்பு கொள்முதலில் வியாபாரிகள், இடைத்தரகர்கள் அணுகினால் கடும் நடவடிக்கை

Byவிஷா

Jan 5, 2025

தமிழக அரசின் பொங்கல் தொகுப்புகளுக்கான கரும்பு கொள்முதலில் வியாபாரிகள், இடைத்தரகர்கள் அணுகினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என கூட்டுறவுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
இது தொடர்பாக கூட்டுறவுத் துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:
பொங்கல் பரிசுத் தொகுப்புக்கான கரும்புகளை கொள்முதல் செய்ய சென்னை தவிர்த்த பிற மாவட்ட ஆட்சியர்களைத் தலைவர்களாக கொண்டும், சென்னையில் மண்டல கூடுதல் பதிவாளரை தலைவராகக் கொண்டும் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. கரும்பு கொள்முதல் குழு மூலம் அந்தந்த வட்டாரங்களில் கரும்பு கொள்முதல் நடைபெற்று வருகிறது.
குறிப்பாக, கரும்பு அந்தந்த மாவட்ட விவசாயிகளிடமிருந்து நேரடியாக வேளாண் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கம் மூலமாக கொள்முதல் செய்யப்படுகிறது. எக்காரணம் கொண்டும் இடைத்தரகர்களிடமிருந்தோ, வியாபாரிகளிடமிருந்தோ, பிற மாநிலங்களிலிருந்தோ கரும்பு கொள்முதல் செய்யப்படுவதில்லை. விவசாயிகளுக்கு கரும்பு கொள்முதல் விலை மின்னணு பரிவர்த்தனை மூலம் நேரடியாக வங்கிக்கணக்கில் செலுத்தப்படுகிறது.
கரும்பு விவசாயிகள் https://rcs.tn.gov.in/rcsweb/sugarcane-form என்ற இணையதள முகவரி வாயிலாகவோ அல்லது மாவட்டவாரியாக இணை பதிவாளர்களை நேரடியாகத் தொடர்பு கொண்டோ கரும்பு கொள்முதல் படிவத்தில் உரிய பதிவுகளை மேற்கொண்டு தாங்கள் விளைவித்த கரும்புகளை விற்பனை செய்யலாம்.
மேலும், கரும்பு கொள்முதல் தொடர்பாக இடைத்தரகர்களோ, வியாபாரிகளோ விவசாயிகளை அணுகினாலோ, தவறான தகவல்களைப் பரப்பினாலோ கடும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.