• Sun. May 5th, 2024

நொடிப்பொழுதில் மனிதர்களைக் கொல்லும் விசித்திரமான விலங்குகள்..!

Byவிஷா

Oct 6, 2023

நொடிப்பொழுதில் மனிதர்களைக் கொல்லும் விசித்திரமான விலங்குகளைப் பற்றிப் பார்ப்போம்..
இந்தோ பசிபிக்கில் மிக மெதுவாக நகரக்கூடிய இந்த பாக்ஸ் ஜெல்லி மீன்கள் மிக விஷமான கடல் விலங்குகளாக தேசிய கடல் மற்றும் வளிமண்டல நிர்வாகத்தால் வகைப்படுத்தப்பட்டுள்ளது. இந்த ஜெல்லி பிஷ்ஷின் வால் போன்ற பகுதிகள் 10 அடி நீளம் வரைக்கும் வளரக்கூடியது. இது ஆயிரக்கணக்கான கொட்டும் செல்களை வரிசையாக கொண்டுள்ளது. இது நம்மை தாக்கினால் ஒரே நேரத்தில் அது இதயம், நரம்பு மண்டலம், தோல் செல்களை தாக்கும் அளவிற்கு நச்சுக்கள் உள்ளது. கடற்கரையில் இதனால் பாதிக்கப்பட்டவர்கள் கரையை அடைவதற்கு முன்பு அதிர்ச்சி காரணமாக தண்ணீரில் மூழ்கி இறந்து விடுவார்கள். இல்லை என்றால் இதய செயலிழப்பால் இறந்துவிடுவார்கள்.
இந்தியன் சா-ஸ்கேல்டு வைப்பர் இன விஷம் கொண்ட பாம்புகள் அதிகம் பாலைவனத்தில் வாழக்கூடியவை. பாலைவனத்தில் உள்ள மண்ணுக்கு ஏற்ப இதனுடைய நிறமும் இருக்கும். இதனால் இது நம்முடைய அருகில் இருந்தாலும் அவ்வளவு எளிதில் நம்மால் கண்டுகொள்ள முடியாது. இந்த பாம்புகளை இரவில் மட்டுமே நாம் அதிகம் காண முடியும். இரவில் வித்தியாசமான ஒரு ஒலியை இது எழுப்பிக் கொண்டிருக்கும்.
உள்நாட்டு தைபான் பாம்புகள் ஆஸ்திரேலியர்களால் தண்டராபில்லா என்று அழைக்கப்படுகின்றன. அதிகம் தனிமையில் இருக்க விரும்பும். மனிதர்களை கண்டு பயந்தால் மட்டுமே கடிக்க முயற்சிக்கும். கடித்தால் அதன் விஷம் ஒரே நேரத்தில் 100 பேரை கொல்லும் திறன் கொண்டது. மிக வேகமாக துல்லியமாக தாக்கும் திறன் கொண்டது. இந்தப் பாம்பு கடித்தவுடன் நம்முடைய உடல் உறுப்புகள் எல்லாம் செயலிழக்க ஆரம்பிக்கும். வலிப்பு ஏற்படும். மரணம் ஏற்படும் வரைக்கும் உடலின் ஒவ்வொரு பாகங்களும் செயல் இழக்கத் தொடங்கும்.

நீர் யானைகள் பார்ப்பதற்கே மிகவும் விசித்திரமாக தன்னுடைய வாயை மிகப்பெரிய அளவில் திறந்தால் கோரை பற்களோடு காட்சியளிக்கும். இந்த நீர்யானைகள் ஆப்பிரிக்காவின் மிகவும் ஆபத்தான விலங்காக வகைப்படுத்தப்பட்டுள்ளது. கூர்மையான பற்களோடு காட்சியளிக்கும் இவை கொடிய சேதத்தை ஏற்படுத்தக் கூடிய அளவிற்கு வலிமை கொண்டது. அவைகளுடைய இடத்தை யாராவது ஆக்கிரமித்தால் அல்லது அதனுடைய அருகில் சென்றால் மிகக் கொடூரமாக தாக்குவதற்கு தயங்காது. அது எந்த விலங்காக இருந்தாலும் சரி மனிதர்களாக இருந்தாலும் சரி. நீர்யானைகள் யாரையாவது தாக்கும் பொழுது அது ஒரு சதுர அங்குலத்திற்கு 2 ஆயிரம் பவுண்டுகள் அழுத்தத்தில் கிட்டத்தட்ட இரண்டு அடி நீளமுள்ள கோரைப்பற்களை கொண்டு தாக்கும். சிங்கம் ஒருவரை கடிக்கும்பொழுது கூட இதில் பாதி அழுத்தத்தையே பயன்படுத்துகிறது.
அழகான கூம்பு நத்தை அதனுடைய அழகான பளிங்கு ஓடுகள் காரணமாக பலரையும் சுண்டி இழுக்கும். இது பொதுவாக கடற்கரைக்கு அருகில் உள்ள ஆழமற்ற இடங்களிலும், பவளப்பாறைகள், பாறைகளுக்கு அருகிலும், மணல் மேடுகளுக்கு அடியிலும் காணப்படுகிறது. இந்த அழகான கூம்பு நத்தையை நீங்கள் தெரியாமல் தொட்டால் அவ்வளவுதான். இதன் உடலில் உள்ள கானோடாக்சின் விஷம் நரம்பு செல்களை ஒன்றோடொன்று தொடர்பு கொள்வதை நிறுத்திக் கொள்கிறது. ஆகையால் இது ஒரு சில நிமிடங்களிலேயே பக்கவாதத்தை ஏற்படுத்தும். இதனுடைய விஷம் நம்முடைய உடலில் செலுத்தப்பட்டால் 5 நிமிடங்களில் இறப்பது உறுதி.
மஞ்சள் நிறத்தில் இருக்கக்கூடிய இந்த அழகான தவளை அதிக விஷம் கொண்டது என சொன்னால் உங்களால் நம்ப முடிகிறதா. இந்த தவளைகள் மனிதர்களுக்கு மிகவும் ஆபத்தானது. கொலம்பியாவில் பசிபிக் கடற்கரையில் உள்ள சிறிய மழைக்காடுகளில் மட்டுமே மிகவும் கொடிய இந்த தவளை வாழ்ந்து வருகிறது. சின்ன தவளை சுமார் இரண்டு அங்குல நீளம் மட்டுமே இருக்கும். இரண்டு மைக்ரோகிராம்கள் மட்டுமே கொண்ட இந்த தவளையின் விஷம் 10 மனிதர்களை கொல்லும் சக்தி வாய்ந்தது. இந்த தவளையின் ஆபத்தான விஷ சுரப்பிகள் அதனுடைய தோலுக்கு அடியில் இருக்கும். இதை நீங்கள் தொட்டாலே ஆபத்தை ஏற்படுத்தும்.

ப்ளோஃபிஷ் என்றும் அழைக்கப்படும் பஃபர்ஃபிஷ் வெப்பமண்டல கடல்களில் அதிகம் வசிக்கிறது. அவற்றின் நியூரோடாக்சின் விஷம் மிகவும் நச்சு மிகுந்தது. இதனால் ஜப்பான் போன்ற நாடுகளில் பஃபர்ஃபிஷ் சாப்பிடும் போது மனிதர்கள் இறக்கும் அபாயம் அதிகரிக்கிறது. ஒவ்வொரு வருடமும் இந்த மீனை சாப்பிடுவதால் பல மரணங்கள் ஏற்படுகின்றன. டெட்ரோடோடாக்சின் சயனைடை விட 1,200 மடங்கு அதிக நச்சுத்தன்மை கொண்டது. இது நாக்கு மற்றும் உதடுகளை சிதைத்துவிடும். தலைச்சுற்றல், வாந்தி, சுவாசிப்பதில் சிரமம், தசை முடக்கம் சரியான சிகிச்சையளிக்கப்படாவிட்டால் மரணத்தை கூட ஏற்படுத்தும்.

பிரேசிலிய வான்டெரிங் சிலந்தி ஐந்திலிருந்து ஏழு அங்குல நீளம் இருக்கும். அதிக விஷம் இருந்தாலும் இது மனிதர்களை கடிப்பது மிகவும் அரிது. இந்த சிலந்திகளுக்கு நச்சுகள் நிறைந்த கோரைப்பற்கள் உள்ளது. இந்த சிலந்தி கடித்த இரண்டிலிருந்து ஆறு மணி நேரத்திற்குள் மரணம் ஏற்படும்.கல் மீன் மிகவும் நச்சுத்தன்மை உள்ள மீன். இந்த மீனின் விஷம் உடலில் செலுத்தப்பட்டால் ஒரு மணி நேரத்திற்குள் இறப்பு நிச்சயம். விஷம் ஏறுவதற்கு முன்னே மருத்துவமனையை அணுகுவது சிறந்தது.

முதலை இனங்களில் மிகவும் ஆபத்தானது உப்புநீர் முதலை. இந்த வகை உப்புநீர் முதலைகள் 23 அடி நீளம் வரை வளரக்கூடியது. ஒரு டன்னுக்கும் அதிகமான எடை இருக்கும். இது ஒவ்வொரு ஆண்டும் நூற்றுக்கணக்கான மக்களை கொல்வதாக அறிக்கை சொல்கிறது. சுறாக்களை விட அதிக மனித இழப்புகளுக்கு இந்த முதலைகளை காரணமாகிறது.

டி செட்ஸ் ஃப்ளை ஈக்கள் உலகின் மிகவும் ஆபத்தான ஈக்கள் என சொல்லப்படுகிறது. இந்த ஈக்கள் உடலில் இருந்து இரத்தத்தை உறிஞ்சி குடிப்பது மட்டுமல்லாமல் மிகவும் பயங்கரமான டிரிபனோசோம்கள் எனப்படும் புரோட்டோசோவான் ஒட்டுண்ணிகளைக் கொண்டுள்ளது. இந்த ஒட்டுண்ணிகள் மிக மோசமான ஆபத்துகளை ஏற்படுத்தக் கூடியது. தடுப்பூசிகளோ மருந்துகளோ கண்டுபிடிக்கப்படவில்லை.

வெறும் மூன்று மில்லி மீட்டர்களே கொண்ட சிறிய கொசு உலகின் இரண்டாவது மிக ஆபத்தான உயிரினம். உலகம் முழுவதும் மொத்தம் மூவாயிரம் வகையான கொசுக்கள் உள்ளது. ஒவ்வொரு ஆண்டும் கொசுக்களால் ஏற்படும் நோய் கிருமிகளால் லட்சக் கணக்கான மக்கள் இறந்து போகிறார்கள். ஒவ்வொரு ஆண்டும் சராசரியாக 725,000 மக்கள் கொசுக்கடியால் இறந்து போகிறார்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *