உசிலம்பட்டி அருகே குல தெய்வ கோவில்களின் கோபுர கலசங்கள் திருடப்பட்டுள்ளது. திருடப்பட்ட 4 கலசங்கள் குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே கொடிக்குளம் கிராமத்தின் மேற்கு பகுதியில் வயல்வெளிகளின் நடுவே அமைந்துள்ளது அங்காள ஈஸ்வரி மற்றும் சுந்தர மூர்த்தி பெருமாள் கோவில்.
அருகருகே அமைந்துள்ள இந்த பழமை வாய்ந்த குல தெய்வ கோவிலை புரணமைப்பு செய்து கோபுரங்கள் எழுப்பி அங்காள ஈஸ்வரி கோவிலில் ஒரு கலசத்துடன் கோபுரம் மற்றும், சுந்தர மூர்த்தி பெருமாள் கோவிலில் 3 கலசத்துடன் கோபுரம் எழுப்பி, கடந்த 2020 ஆம் ஆண்டு அடுத்தடுத்து கும்பாபிஷேகம் நடைபெற்றதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் இன்று காலை அவ்வழியாக தோட்டத்து பகுதிக்கு சென்ற பொதுமக்கள் கோவிலின் கோபுர கலசங்கள் இல்லாமல் இருந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்து காவல்துறையினருக்கு தகவல் அளித்தனர்.
இந்த தகவலின் விரைந்து வந்த வாலாந்தூர் காவல் நிலைய போலீசார் இந்த இரு கோவில்களில் 4 கோபுர கலசங்கள் திருடு போனது குறித்து வழக்கு பதிவு செய்து கலசங்களை திருடி சென்ற மர்ம நபர்கள் குறித்தும் தொடர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேலும் இதே அங்காள ஈஸ்வரி கோவிலில் கடந்த 4 மாதங்களுக்கு முன்பு கோவில் உண்டியலை உடைத்து பணம் மற்றும் நகைகளை கொள்ளையடித்து சென்ற வழக்கு நிலுவையில் உள்ள சூழலில் அதே கோவில் மற்றும் அதன் அருகே உள்ள கோவிலில் கோபுர கலசங்கள் திருடு போன சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.