
பஞ்சாப் மாநிலத்தில் காங்கிரஸ் தலைமையிலான ஆட்சி நடைபெற்று வருகிறது. அங்கு அடுத்தாண்டு சட்டமன்ற தேர்தல் வரவுள்ள நிலையில், ஆளும் கட்சியான காங்கிரஸில் அடுத்தடுத்து குழப்பம் நிலவி வருகிறது. இந்த குழப்பங்களுக்கு மத்தியில் தற்போது புதிய முதலமைச்சராக சரண்ஜித் சிங் சன்னி பொறுப்பு வகித்து வருகிறார்.
இந்த நிலையில், அண்மையில் பஞ்சாப் மாநில தலைநகர் சண்டிகரில் முதலமைச்சர் சரண்ஜித் சிங் சன்னி தலைமையில் மாநில அமைச்சரவைக் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில், பஞ்சாபி மற்றும் பிற மொழிகள் கல்வி திருத்த மசோதா, பஞ்சாப் மாநில மொழி திருத்த மசோதா உட்பட 15 மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டன.
இது தொடர்பாக, ட்விட்டரில் முதலமைச்சர் சரண்ஜித் சிங் சன்னி பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், பஞ்சாப் மாநிலத்தில் அனைத்து பள்ளிகளிலும் பயிலும் 1ஆம் வகுப்பு முதல் 10ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பஞ்சாபி மொழி கட்டாயப் பாடமாக்கப்படுகிறது. இந்த உத்தரவை மீறும் பள்ளிகளுக்கு 2 லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்படும்.மேலும், அரசு அலுவலகங்களிலும் பஞ்சாபி கட்டாய மொழி ஆக்கப்படுகிறது. மாநிலம் முழுவதும் உள்ள அனைத்து பெயர் பலகைகளிலும் பஞ்சாபி மொழி தான் முதன்மையானதாக இருக்க வேண்டும், எனத் தெரிவித்துள்ளார்.
