நாங்குநேரி சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர்களையும், டெல்டா விவசாயிகளையும் ஆறுதல் கூற ஸ்டாலினுக்கு நேரம் ஒதுக்க மனமில்லை என முன்னாள் அமைச்சர், சட்டமன்ற எதிர்க்கட்சி துணைத்தலைவர் ஆர்.பி.உதயகுமார் குற்றச்சாட்டு எழுப்பியுள்ளார்.
எடப்பாடியார் தலைமையில் நடைபெறும் மாநாட்டிற்காக பொதுமக்களை பங்கேற்கும் வகையில் கழக அம்மா பேரவையின் சார்பில் மரக்கன்றுகள் வழங்கி விளம்பர லோகோவை இரு சக்கர வாகனங்களை பொருத்தும் நிகழ்ச்சி கழக அம்மா பேரவை சார்பில் மதுரை புறநகர்( தெ)மேற்கு ஒன்றியம் குமாரத்தில் நடைபெற்றது. இதற்கு ஒன்றிய கழக பொறுப்பாளர் அரியூர் ராதாகிருஷ்ணன் தலைமை தாங்கினார் சட்டமன்ற எதிர்க்கட்சி துணை தலைவர் ஆர்.பி உதயகுமார் மரக்கன்றுகளை வழங்கி பொதுமக்களுக்கு அழைப்பு விடுத்தார்.
இந்த நிகழ்ச்சிகள் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் எம்.வி. கருப்பையா, எஸ்.எஸ். சரவணன், கே தமிழரசன், மாணிக்கம், மாநில அம்மா பேரவை இணைச் செயலாளர் இளங்கோவன், மாநில அம்மா பேரவை துணைச் செயலாளர்கள் வெற்றிவேல், தனராஜ், ஒன்றிய கழகச் செயலாளர்கள் காளிதாஸ் கொரியர் கணேசன் வாடிப்பட்டி பேரூர் கழகச் செயலாளர் அசோக்குமார் மாவட்ட மீனவரணி செயலாளர் மகேந்திர பாண்டி உட்பட பலர் கலந்து கொண்டனர்.
இந்நிகழ்ச்சியில் சட்டமன்ற எதிர்க்கட்சி துணைத்தலைவர், முன்னாள் அமைச்சர்ஆர்.பி.உதயகுமார் பேசியதாவது..,
கழகப் பொதுச் செயலாளர் எடப்பாடியார் தலைமையில், ஆகஸ்ட் 20 ம்தேதி நடைபெறும் மாநாடு முதலில் 25 ஏக்கரில் நடந்த திட்டமிடப்பட்டது. அதனை தொடர்ந்து 35 ஏக்கர், அதனைத் தொடர்ந்து 65 ஏக்கரில் விரிவுபடுத்தப்பட்டுள்ளது. இந்த மாநாட்டில் 25 லட்சம் பேர்கள் பங்கேற்கள்ளனர் குறிப்பாக அவர்களுக்கு வழங்கப்படும் உணவு அவசரமாக தயாரிக்க கூடாது, சாதம் குழைவாக இருக்க வேண்டும் என்று ஒரு தாயைப் போல எங்களுக்கு அறிவுரை வழங்கி உள்ளார். அதேபோல் வருபவர்களுக்கு சுகாதாரம், குடிநீர், கழிப்பறை போன்ற வசதிகள் ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. தற்போது வாகனங்களை நிறுத்த மட்டும் 350 ஏக்கர் நிலம் ஒதுக்கப்பட்டுள்ளது.
தற்போது ஆடி மாதம் என்பதால் காற்று அதிகமாக உள்ளது அதனால் மைதானத்தில் தூசி ஏற்பட்டு தொண்டர்களுக்கு இடையூறு ஏற்படாடல் இருக்கும் வகையில், மைதானத்தில் 35 ஏக்கரில் தரையில் மேட் அமைக்கப்படுகிறது. மாநாட்டில் கழகத்திற்காக உழைத்த மூத்த நிர்வாகிகளுக்கு பொன்னாடை அணிவித்து எடப்பாடியார் கௌரவிக்கிறார் இந்த மாநாட்டின் காலையில் மாநாட்டு பந்தலில் எடப்பாடியார் கழக கொடியினை ஏற்றும் பொழுது, கழக தொண்டர் படைகள் ராணுவ சிப்பாய்கள் போல் மரியாதை அளிக்கிறார்கள்.
ஜல்லிக்கட்டு போட்டியின் போது ஒவ்வொரு கிராமங்களில் வாடி வாசல் வழியாக, கிராம தேவதைகளை வணங்கி காளைகளை பாரம்பரியமாக விடுவார்கள். ஆனால் பொம்மை விளையாட்டு போல் அலங்காநல்லூர் பகுதியில் ஜல்லிக்கட்டு மைதானத்தை ஸ்டாலின் அமைத்து வருகிறார். இந்த மைதானத்தை இப்பகுதி மக்கள் யாரும் கேட்கவில்லை.
ஸ்டாலின் நாட்டு மக்களுக்காக எதையும் செய்யவில்லை ஆனால் தனது தந்தையார் புகழை பரப்ப கல்வெட்டு வைப்பதற்கும், தனது மகன் உதயநிதியை முதலமைச்சராக ஆக்குவதற்கும் தான் உழைத்து வருகிறார்.
தமிழகத்தில் பள்ளிகளில் ஜாதி தீண்டாமை அதிகரித்து வருகிறது இது வேதனை உச்சமாகும். மாமன்னன் படம் எடுத்த இயக்குனரை ஸ்டாலின் நேரில் சென்று பாராட்டுகிறார். ஆனால் நாங்குநேரி சம்பவத்தில் பாதிக்கப்பட்ட மாணவர்களையும், அதே போல் டெல்டா பகுதிகளில் பாதிப்படைந்த விவசாயிகளை நேரில் சந்தித்து ஆறுதல் சொல்ல முதலமைச்சருக்கு நேரமில்லை. கடைக்கோடி பகுதிகளுக்கு தண்ணீர் கிடைக்கும் என்று சொல்லி தண்ணீரை முதலமைச்சர் திறந்து விட்டார். ஆனால் அதை நம்பி நாத்து நட்ட விவசாயிகள் வேதனையில் உள்ளனர்.
சட்டமன்றத்தில் அம்மாவுக்கு நடந்த கொடுமை குறித்து எடப்பாடியார் விரிவாக வெளியிட்டுள்ளார். ஆனால் ஸ்டாலின் பச்சைபொய் இதில் பேசியிருக்கிறார். அம்மா 1991 ஆண்டில் முதலமைச்சராக வரும்பொழுது தாயுள்ளத்தோடு மன்னித்து, அவர்கள் மீது எந்த நடவடிக்கை எடுக்கவில்லை. எடப்பாடியார் முதலமைச்சராக இருந்த பொழுது அப்போது எதிர் கட்சி தலைவராக இருந்த ஸ்டாலின் தாமாக சட்டையை கிழித்துக்கொண்டு,அதை அதிமுக உறுப்பினர்கள் தான் சட்டையை கிழித்து விட்டதாக ஒரு பச்சை பொய் நாடகத்தை ஸ்டாலின் அரங்கேற்றினார் என்பது அனைவருக்கும் தெரியும் என கூறினார்.