108 வைணவ திருத்தலங்களில் பிரசித்தி பெற்றது ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவில் ஆகும். ஆண்டாள், பெரியாழ்வார் ஆகிய இரு ஆழ்வார்கள் அவதரித்த சிறப்புக்குரியது இந்த ஸ்தலம். இங்கு ஆண்டு தோறும் ஆண்டாளின் அவதார தினமான ஆடி மாத பூரம் நட்சத்திரத்தன்று ஆடிப்பூர தேரோட்ட திருவிழா விமரிசையாக நடைபெறும்.

இந்தாண்டுக்கான திருவிழா கடந்த 20 ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. நாள் தோறும் ஸ்ரீஆண்டாள் ஸ்ரீரெங்கமன்னார் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி மண்டபம் எழுந்தருள்து வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.விழாவின் முக்கிய நிகழ்ச்சியான இன்று அதிகாலை ஸ்ரீஆண்டாள் ஸ்ரீரெங்கமன்னாருக்கு சிறப்பு திருமஞ்சனம் நடைபெற்று திருத்தேரில் எழுந்தருளினர்.

பின்னர் காலை 9.10 மணிக்கு ஆட்சியர் சுகபுத்ரா அமைச்சர்கள் கே.கே.எஸ்.எஸ்.ஆர் இராமச்சந்திரன், தங்கம் தென்னரசு ஆகியோர் தேரை வடம் பிடிக்க பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கோவிந்தா,கோபாலா கோஷம் முழங்க திருத்தேர் இழுத்தனர்.பக்தர்களின் பரவசத்துடன் திருத்தேர் நான்கு மாடவீதிகள் வழியாக வலம் வந்து 11.30 மணிக்கு நிலையை அடைந்தது.விழா ஏற்பாடுகளை செயல் அலுவலர் சக்கரையம்மாள், தக்கார் வெங்கட்ராம ராஜா ஆகியோர் செய்திருந்தனர்.