• Mon. Feb 16th, 2026
WhatsAppImage2026-02-12at2247202
previous arrow
next arrow
Read Now

ஶ்ரீரங்கம் சித்திரை திருவிழா தேரோட்டம்..,

ByRadhakrishnan Thangaraj

Apr 25, 2025

ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோயில் கோயில் சித்திரை திருவிழாவில் நாளை(ஏப்ரல் 26) தேரோட்டம் நடைபெற உள்ள நிலையில் நம்பெருமாளுக்கு சாற்றுவதற்காக ஸ்ரீவில்லிபுத்தூரில் இருந்து ஆண்டாள் சூடிய பட்டு வஸ்திரம், கிளி உள்ளிட்ட மங்களப் பொருட்கள் ஶ்ரீரங்கம் அனுப்பி வைக்கப்பட்டது.

108 வைணவ திவ்ய தேசங்களில் பிரசித்தி பெற்ற ஸ்ரீவில்லிபுத்தூரில் பெரியாழ்வாரின் மகளாக அவதரித்த ஆண்டாள் தன்னை பெருமாளின் மனைவியாக நினைத்து மூலவர் பெரிய பெருமாளுக்கு தொடுத்த பூ மாலையை சூடிக் கொண்டார். ஆண்டாள் மார்கழி மாதத்தில் பாவை நோன்பு இருந்து ஸ்ரீரங்கம் ரெங்கநாதரை மணம் புரிந்தார். ஆண்டாள் 108 திவ்ய தேச பெருமாள்களை மாலையாக சூடி இருப்பதாக ஐதீகம். அதைக் குறிக்கும் வகையில் ஆண்டாள் சந்நிதி உட்பிரகாரத்தில் 108 திவ்ய தேச பெருமாளும் ஓவியமாக வரையப்பட்டு உள்ளது.

திருப்பதி பிரம்மோற்சவத்தில் கருட சேவையின் போது மலையப்ப சுவாமி, மதுரை சித்திரை திருவிழாவில் வைகை ஆற்றில் இறங்கும்போது கள்ளழகர், ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோயில் சித்திரை தேரோட்டத்தில் நம்பெருமாள் ஆகியோர் ஆண்டாள் சூடிக் கொடுத்த மாலை, பட்டு வஸ்திரம் அணிந்து எழுந்தருள்கின்றனர்.

அதன்படி ஸ்ரீரங்கம் சித்திரை திருவிழாவில் நாளை(ஏப்ரல் 26) தேரோட்டம் நடைபெறுவதை முன்னிட்டு ஸ்ரீவில்லிபுத்தூரில் இருந்து ஆண்டாள் சூடிக்கொடுத்த பட்டு வஸ்திரம், கிளி உள்ளிட்ட மங்கள பொருட்கள் நேற்று ஶ்ரீரங்கம் அனுப்பி வைக்கப்பட்டது. முன்னதாக ஆண்டாளுக்கு கிளி, பட்டு வஸ்திரம் சாற்றப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. அதனைதொடர்ந்து கிளி, பட்டு வஸ்திரம் ஆகியவை மாட வீதிகள் வழியாக மங்கள வாத்தியங்கள் முழங்க ஊர்வலமாக எடுத்து வரப்பட்டு ஸ்ரீரங்கத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டது.

இதில் கோயில் செயல் அலுவலர் சர்க்கரையம்மாள், சுதர்சன் பட்டர், ரமேஷ் பட்டர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.