• Tue. Jan 13th, 2026
WhatsApp Image 2025-12-12 at 01.15.51
previous arrow
next arrow
Read Now

ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை 50 ஆண்டு பொன்விழா..,

BySeenu

Jan 13, 2026

கோவை எஸ்.என்.ஆர்.சன்ஸ் அறக்கட்டளையின் ஆதரவில் இயங்கும் முன்னணி மருத்துவமனையான ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை தனது 50 வது ஆண்டு பொன்விழாவையும், ஸ்ரீ ராமகிருஷ்ணா பல் மருத்துவமனை அதன் 25 வது ஆண்டு வெள்ளிவிழாவையும் வரும் ஜனவரி 15 ஆம் தேதி சிறப்பாக கொண்டாட உள்ளது.

இதன் அறிவிப்பு நிகழ்வு மற்றும் செய்தியாளர் சந்திப்பு நிகழ்ச்சி கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனையில் நடைபெற்றது. இந்த நிகழ்வில் எஸ்.என்.ஆர்., சன்ஸ் அறக்கட்டளை நிர்வாக அறங்காவலர் டாக்டர் சுந்தர் ராமகிருஷ்ணன் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.

அப்போது பேசிய அவர்,

எஸ்.என்.ஆர்., சன்ஸ் அறக்கட்டளை, கோவையில் 1970 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது.1975 ஆம் ஆண்டு 18 ஏக்கர் பரப்பளவில் நகரின் மையப் பகுதியில் ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை துவங்கப்பட்டது.கோயம்புத்தூரில் முதல் எம்.ஆர்.ஐ ஸ்கேன், மருத்துவத் துறையின் அதிநவீன உபகரணங்கள், மருத்துவத்தின் சிறப்புத் துறைகளை உருவாக்குதல், மேம்பட்ட இதய சிகிச்சை என்று சாதனைகளின் தோற்றுவாயாக உருவானது ஸ்ரீ ராமகிருஷ்ணா பன்னோக்கு மருத்துவனை.

1990–ல் ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை என்னும் முதல் வெற்றியைப் பதித்தது. 2005 இந்தியாவின் மறைந்த முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர் ஏ.பி.ஜே. அப்துல் கலாம் வருகைபுரிந்தார். புற்று நோய்க்கான சிறப்பு சிகிச்சை துறை அப்போது தொடங்கப்பட்டது. 2015 ஆம் ஆண்டு சுமார் 250 கோடி ரூபாய் செலவில் உலகத்தரம் கொண்ட மேம்படுத்தப்பட்ட பன்னோக்கு சிறப்பு சிகிச்சை மையம் கட்டமைக்கப்பட்டது.

ஸ்ரீ ராமகிருஷ்ணா பன்னோக்கு மருத்துவமனையின் 50 ஆவது ஆண்டு பொன்விழா, ஸ்ரீ ராமகிருஷ்ணா பல் மருத்துவமனையின் 25-வது ஆண்டு வெள்ளிவிழா கோவை அவினாசி சாலையில் உள்ள கொடிசியா வர்த்த வளாகத்தில் வரும் ஜனவரி 15 ஆம் தேதி, மாலை 5 மணிக்கு கோலாகலமாகக் கொண்டாடப்பட உள்ளது.
இந்தியக் குடியரசு துணைத் தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு சிறப்புரையாற்றுகிறார். அரசியல் தலைவர்கள், அரசு உயரதிகாரிகள், தொழிலதிபர்கள் கலந்து கொள்கின்றனர், என டாக்டர் சுந்தர் ராமகிருஷ்ணன் கூறினார்.

தொடர்ந்து அவர் கூறுகையில்,

“கடந்த 50 ஆண்டுகளில் கோயம்புத்தூரில் தொழில்நுட்ப ரீதியாக முன்னேறிய ஒரு மருத்துவ நிறுவனமாக எங்களை நிலைநிறுத்திக் கொண்டுள்ளோம். அடுத்த 50 ஆண்டுகளில், மிகவும் மேம்பட்ட மருத்துவ அமைப்புகள் மற்றும் உபகரணங்களில் முதலீடு செய்யவும், அதிநவீன தொழில்நுட்பத்துடன் கூடிய சிறந்த சிகிச்சையை வழங்கி கொங்கு மண்டலத்தின் மிகச்சிறந்த மருத்துவமனையாகத் திகழவும் நாங்கள் விரும்புகிறோம்,” என்றார்.

பேட்டியின் போது, எஸ்.என்.ஆர்., சன்ஸ் அறக்கட்டளை இணை நிர்வாக அறங்காவலர் திரு. நரேந்திரன் சௌந்திரராஜ், தலைமை நிர்வாக அதிகாரி டி. மகேஷ்குமார், ஸ்ரீ இராமகிருஷ்ணா மருத்துவமனை மருத்துவ இயக்குநர் டாக்டர் எஸ். அழகப்பன் ஆகியோர் உடனிருந்தனர்.