• Sat. Nov 1st, 2025
WhatsAppImage2025-10-23at221255
WhatsAppImage2025-10-23at2213003
WhatsAppImage2025-10-23at221300
WhatsAppImage2025-10-23at2213004
WhatsAppImage2025-10-23at2213002
WhatsAppImage2025-10-23at221253
WhatsAppImage2025-10-23at221250
WhatsAppImage2025-10-23at2213001
WhatsAppImage2025-10-23at221249
WhatsAppImage2025-10-23at221252
WhatsAppImage2025-10-23at2213005
WhatsAppImage2025-10-23at2213006
WhatsAppImage2025-10-23at221251
previous arrow
next arrow
Read Now

முதல்முறையாக இந்தியாவில் வாக்களிக்கும் இலங்கை பெண்

Byவிஷா

Apr 17, 2024

இந்தியாவில் வசிக்கும் இலங்கைப் பெண் போராடிப் பெற்ற வாக்குரிமை மூலம், முதல்முறையாக அவர் இந்தியாவில் வாக்களிக்க உள்ளார். இதன்மூலம் புறக்கணிக்கப்பட்ட எங்களுக்கு நீதி வழங்குவதாகவும் அமையும் எனவும் அவர் பேட்டி அளித்துள்ளார்.
திருச்சி மாவட்டம் கோட்டப்பட்டு பகுதியில் அமைந்துள்ள இலங்கை தமிழர்களின் மறுவாழ்வு முகாமில் தங்கியுள்ள நளினி கிருபாகரன், கடந்த 1986ம் ஆண்டு ராமேஸ்வரத்தில் உள்ள மண்டபம் பகுதியில் அமைந்துள்ள இலங்கை மக்கள் மறுவாழ்வு முகாமில்தான் பிறந்தார். அவர் இந்தியாவில் பிறந்ததால், தனக்கு இந்திய குடியுரிமை வேண்டும் என பல்வேறு சட்ட போராட்டங்களை நடத்தினார். இதைதொடர்ந்து, ஒரு நாட்டின் குடிமக்கள் என்ற அடையாளம் இல்லாமல், அகதிகள் முகாமில் வாழ்ந்து வந்தார். இதைதொடர்ந்து, கடந்த 2021ம் ஆண்டு மண்டல பாஸ்போர்ட் அலுவலகம், இந்திய பாஸ்போர்ட் வழங்க மறுத்தது. அன்றை தினத்தில் தொடங்கியது, நளினியின் குடியுரிமை சட்டப்போராட்டம். இதற்காக, அவர் சென்னை உயர் நீதிமன்றத்தை அவர் நாடினார்.
நீதிமன்றத்தில், மண்டபம் பகுதியில் அவர் பிறந்ததற்கான பிறப்பு சான்றிதழ் சமர்ப்பித்தார். இந்த வழக்கை விசாரித்த மதுரைக் கிளை உயர் நீதிமன்ற நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன் கடந்த 2022ம் ஆண்டு, இந்திய பாஸ்போர்ட் வழங்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். அதன்படி பாஸ்போர்ட் கிடைத்த அவர், இந்திய குடியுரிமைச் சட்டம் 1995ன்படி, 1950 ஜனவரி 26 முதல் 1987 ஜூலை 1ம் தேதிக்கு இடைப்பட்ட காலத்தில் இந்தியாவில் பிறக்கும் அனைவரும் இந்திய குடிமகனாக கருதப்படும் என பிரிவு 3 வரையறுக்கப்பட்டு, மாவட்ட நிர்வாகத்தின் சிறப்பு அனுமதியின்பேரில், அதே முகாமில், தனது குடும்பத்துடன் தங்கியிருந்தார். இதைதொடர்ந்து அவருக்கு, இந்திய நாட்டில் நடக்கும் தேர்தலில் வாக்களிக்க உரிமை கோரினார். மேலும், அவர் தங்கியுள்ள திருச்சி மக்களவை தொகுதியில் போட்டியிடும் அனைத்து வேட்பாளர்களின் பெயர்களையும், அவர்களது கட்சி மற்றும் சின்னங்களையும் அறிந்துள்ளார். இதையொட்டி அவருக்கு, மக்களவை தேர்தலில் வாக்களிக்கும உரிமைக்கான வாக்காளர் அடையாள அட்டை வழங்கப்பட்டது.
இதுகுறித்து நளினி, செய்தியாளர்களிடம் கூறியதாவது..,
திருச்சியில் போட்டியிடும் அனைத்து வேட்பாளர்களின் பெயர்களும் எனக்கு நன்கு தெரியும். எனக்கு வாக்காளர் அடையாள அட்டை கிடைத்துள்ளது. இந்த உரிமை, என்னுடன் முகாமில் தங்கியுள்ள அனைவருக்கும் கிடைக்க வேண்டும் என, சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு கோரிக்கை விடுக்கிறேன். என் கனவு இன்று நனவாகியிருக்கிறது. பல ஆண்டுகாலமாக, மாநிலத்தின் பல்வேறு பகுதிகளிலும் அமைக்கப்பட்டுள்ள முகாம்களில் தங்கியிருக்கும் இலங்கை தமிழ் மக்களுக்கு இந்திய குடியுரிமை வழங்கப்படும் என வாக்குறுதி அளிக்கும் கட்சிக்கு எனது வாக்கினை செலுத்துவேன். எனது சட்டப்போராட்டம் நின்றுவிடவில்லை. இப்போது, இந்தியாவில் பிறந்த எனது 2 பிள்ளைகளுக்கும் இந்திய குடியுரிமை பெறுவதற்காக போராடிகொண்டிருக்கிறேன் என்கிறார். இதுபோலவே தங்களுக்கும் இந்திய குடியுரிமை வேண்டும் என்று இங்கே பிறந்தவர்களும், 20 ஆண்டுகளுக்கும் மேலாக வாழ்பவர்களும் போராடுகிறார்கள். தமிழக அரசு வழங்கும் பல திட்டங்கள் தற்போது எங்களுக்கும் கிடைக்கிறது. அதுபோல வாக்களிக்கும் உரிமையும் கிடைத்தால் இங்கே வாழ்கிறோம் என்பதை உணர்வோம். இது, பல ஆண்டுகாலமாக புறக்கணிக்கப்பட்ட எங்களுக்கு நீதி வழங்குவதாகவும் அமையும் என்றார்.