காரைக்காலில் புகழ் பெற்ற ஸ்ரீகைலாசநாதர் கோவில் கும்பாபிஷேக பந்தல்கால் முகூர்த்த நிகழ்ச்சி தொடங்கியது.
காரைக்கால் மாவட்டத்தின் மையப்பகுதியில் அமைந்துள்ள பழமை வாய்ந்த ஸ்ரீ சுந்தராம்பாள் சமேத ஸ்ரீகைலாசநாதசுவாமி திருக்கோவில் மகா கும்பாபிஷேகம் வரும் ஜீன் மாதம் 5ம் தேதி நடைபெற உள்ளது. இதனையொட்டி கோவிலில் புனரமைப்பு பணிகள் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் இன்று மூலஸ்தானத்திற்கு தெற்குவாசல் திறக்கப்பட்டு, அதற்கான பூர்வாங்க பூஜைகள் நடைபெற்று வாசல்கால் முகூர்த்தம் நடைபெற்றது. அதனை தொடர்ந்து, கும்பாபிஷேகத்திற்கான பந்தல்கால் முகூர்த்த நிகழ்ச்சி தொடங்கியது.
பந்தல்காலுக்கு திரவியப்பொடி, மஞ்சள், பால், தயிர், சந்தனம் உள்ளிட்ட பல்வேறு வாசனை திரவியங்களாலும், கலச தீர்த்தினாலும் அபிஷேகம் நடைபெற்று மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. அதனை தொடர்ந்து கோவிலை சுற்றி வந்து பந்தல்கால் முகூர்த்தம் நடைபெற்றது.
இதில் கோவில் நிர்வாக அதிகாரி காளிதாஸ், விழா கமிட்டி தலைவர் வெற்றிச்செல்வன் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.