கடந்த சில நாட்களாக சமூக வலைதளங்களில் புகைப்படம் ஒன்று பரவி வருகிறது. இது உண்மையா, இல்லை பொய்யா என்ற கேள்வி பலரிடம் எழுந்துவந்தது. இந்நிலையில் இது உண்மை இல்லை என ‘தி நியூயார்க் டைம்ஸ்’ அறிவித்துள்ளது.

செப்டம்பர் 26 என தேதி குறிப்பிடப்பட்ட அந்த ‘தி நியூயார்க் டைம்ஸ்’ பத்திரிகையில் பிரதமர் மோடியின் புகைப்படம் இடம்பெற்றிருக்கிறது. அதற்கு மேலே ‘உலகின் சிறந்த இறுதி நம்பிக்கை’ என்றும், தலைப்புக்கு கீழே, ‘உலகின் மிகவும் பிரியமான மற்றும் சக்திவாய்ந்த தலைவர் நம்மை ஆசீர்வதிக்க இருக்கிறார்’ என்று குறிப்பிட்டப்பட்டுள்ளது. இதனை நாங்கள் வெளியிடவில்லை என்று கூறி ‘தி நியூயார்க் டைம்ஸ் பத்திரிகை’ மறுத்துள்ளது. ”முற்றிலும் புனையப்பட்டது” எனவும் அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
தனது ட்விட்டர் பக்கத்தில் இது தொடர்பாக வெளியிட்டுள்ள டிவிட்டில், ”இது முற்றிலும் புனையப்பட்ட புகைப்படம். உண்மையான நம்பகத்தனமான செய்திகள் தேவைப்படும் சூழலில், ஃபோட்டோஷாப் செய்யப்பட்ட படங்களை ஆன்லைனில் மறுபகிர்வு செய்வது அல்லது பரப்புவது நிச்சயமற்ற மற்றும் நம்ம்பிகையற்ற தன்மையை மட்டுமே உருவாக்கும்” என்று பதிவிடப்பட்டுள்ளது.
கொரோனா இரண்டாவது அலையை சரியாக கையாள தவறியதாக பா.ஜ.க அரசு குறித்து தி நியூயார்க் டைம்ஸ் பத்திரிகை செய்தி வெளியிட்டது குறித்து பிரதமர் மோடியின் ஆதரவாளர்கள் அந்த பத்திரிகையை விமர்சித்திருந்தது குறிப்பிடத்தக்கது.