கோவை உட்பட தமிழகத்தின் அனைத்து பகுதிகளிலும் நேற்று பிறை தென்பட்டதால் இன்று ரமலான் பண்டிகை கொண்டாடப்படும் என்று அரசு தலைமை ஹாஜி அறிவித்து இருந்தார். அதன்படி இன்று நாடு முழுக்க ரமலான் பண்டிகை கொண்டாடப்படுகிறது. இதற்காகத் தொழுகைகளில் சிறப்புத் தொழுகைக்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன.

இஸ்லாமியர்களின் புனித மாதம் ரமலான் மாதம். இஸ்லாமியர்களின் முக்கிய கடமைகளில் ஒன்றாக நோன்பு இருத்தல் கருதப்படுகிறது. இந்த ரமலான் மாதம் பசி, உணவு உள்ளிட்டவற்றை மறந்து விட்டு தொழுகை, ஒழுக்கத்தை கடைப்பிடிப்பதாக உள்ளது.
பகலில் உணவு, தண்ணீர் ஏதும் இன்றி மாலையில் இப்தார் உணவுடன் நோன்பை துறப்பது வழக்கம். சூரியன் மறையும் வரை இவர்கள் நோன்பை கடைப்பிடிப்பார்கள். நோன்புக்கு முன்பு சஹர் என்ற உணவும், நோன்பிற்கு பிறகு அதாவது முடிக்கும் நேரத்தில் இப்தார் என்றும் அந்த உணவு அழைக்கப்படுகிறது. அதன்படி இன்று நாடு முழுக்க ரமலான் பண்டிகை கோலாகலமாகக் கொண்டாடப்படுகிறது.
ஈகை திருநாளை முன்னிட்டு கோவையில் உள்ள மசூதிகளில் சிறப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டு உள்ளன. கோவையை பொறுத்தவரை உக்கடம், கரும்புக்கடை, ஆத்துப்பாலம், குனியமுத்தூர், டவுன்ஹால், ஆகிய பகுதிகளில் உள்ள மண்டபங்கள் மற்றும் மசூதிகளில் தொழுகை நடந்தது. இதில் இஸ்லாமியர்கள் பலரும் பங்கேற்றனர். தொழுகை முடிந்த பிறகு ஒருவரை ஒருவர் ஆரத்தழுவி அன்பைப் பரிமாறிக் கொண்டனர்.
கோவை, குனியமுத்தூர் பகுதியில் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் சார்பில் அங்கு உள்ள தனியார் திருமண மண்டபம் சிறப்பு தொழுகை நடைபெற்றுக் கொண்டு உள்ளது. இதில் ஆண்கள், பெண்கள், குழந்தைகள் என ஆயிரக் கணக்கான இஸ்லாமியர்கள் கலந்து கொண்டு சிறப்புத் தொழுகையில் ஈடுபட்டு வருகின்றனர்.