சென்னை மேடவாக்கம் பகுதியில், தூய்மை பணியாளர்களின் தன்னலமற்ற பணியை பாராட்டும் விதமாக இந்திய தவ்ஹீத் ஜமாத் காஞ்சிபுரம் மாவட்டம் சார்பில் சிறப்பு கௌரவிப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.

திருவிழாக்கள், இயற்கை பேரிடர்கள், பொதுக்கூட்டங்கள் உள்ளிட்ட சூழ்நிலைகளில் பகல்-இரவு பாராமல் பணியாற்றி, சுற்றுப்புறத்தை சுத்தமாக வைத்திருக்க பெரும் பங்களிப்பு செய்து வரும் தூய்மை பணியாளர்களை போற்றும் நோக்கில், மேடவாக்கம் கிளை சார்பில் ஜல்லடையான் பேட்டையில் இந்த நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டது.
மாவட்ட இணை செயலாளர் எஸ். முகமது அலி தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில், துப்புரவு பணியாளர்களுக்கு பொன்னாடை போற்றி, நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டதுடன், அனைவருக்கும் அசைவ உணவுடன் கூடிய மதிய உணவும் வழங்கப்பட்டது.

இந்த விழாவில் சிறப்பு விருந்தினர்களாக 191-வது வார்டு மாமன்ற உறுப்பினர் லஷ்மி, பள்ளிக்கரணை பகுதி செயலாளர் மற்றும் தொழிலதிபர் எஸ்.கே. ரஹ்மான் ஆகியோர் பங்கேற்று, தூய்மை பணியாளர்களின் சேவையைப் பாராட்டி, நலத்திட்ட உதவிகளை வழங்கினர்.

மேலும், முகமது நூர்தீன் காதிரி, டி. ஹமித், முன்னாள் துணைத் தலைவர் முருகவேல், முகமது மொய்தின், உலாமா பெருமக்கள், தொழிலதிபர்கள், சமூக ஆர்வலர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டு நிகழ்வை சிறப்பித்தனர்.
சமூக நலனுக்காக தினம்தோறும் உழைக்கும் தூய்மை பணியாளர்களுக்கான இந்த கௌரவிப்பு, பொதுமக்களிடையே பாராட்டை பெற்றுள்ளது.





