தேனி மாவட்டம், உத்தமபாளையம் தாலுகா, சின்னமனூர் பகுதியில் உள்ள பிரசித்தி பெற்ற பெருமாள் கோவிலில் புரட்டாசி மாதத்தை முன்னிட்டு 2-வது சனிக்கிழமை சிறப்பு தரிசனம் வெகு விமரிசையாக நடைபெற்றது.

புரட்டாசி மாதம் பெருமாளுக்கு உகந்த மாதமாக கருதப்படுகிறது. குறிப்பாக புரட்டாசி மாதத்தில் வரும் 5 சனிக்கிழமைகளிலும் பெருமாளை தரிசனம் செய்தால் சகல தோஷங்களும் நீங்கி, செல்வ வளம் பெருகும் என்பது ஐதீகம். இதனால் ஒவ்வொரு சனிக்கிழமையும் கோவில்களில் பக்தர்கள் கூட்டம் அலைமோதும்.
அதன்படி சின்னமனூர் பெருமாள் கோவிலில் இன்று அதிகாலை முதலே கோவில் நடை திறக்கப்பட்டு, மூலவருக்கு சிறப்பு திருமஞ்சனம், துளசி அர்ச்சனை, சந்தன அலங்காரம் செய்யப்பட்டது.

இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு, பெருமாளுக்கு துளசி மாலை, கல்கண்டு, பூக்கள், பழங்கள் சமர்ப்பித்து, நெய் விளக்கு மற்றும் துளசி விளக்கு ஏற்றி வழிபாடு செய்தனர்.

தரிசனத்திற்கு வந்த பக்தர்கள் அனைவருக்கும் பிரசாதம் மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது. பக்தர்களின் வசதிக்காக கோவில் நிர்வாகம் சார்பில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.
இந்த சிறப்பு வழிபாட்டில் சின்னமனூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளைச் சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.




