• Mon. Jan 19th, 2026
WhatsAppImage2026-01-15at114305
previous arrow
next arrow
Read Now

பௌர்ணமி கிரிவலத்தை முன்னிட்டு சிறப்பு பேருந்துகள்

Byவிஷா

Feb 22, 2024

திருவண்ணாமலையில் பௌர்ணமி கிரிவலம் மற்றும் வார இறுதிநாட்களை முன்னிட்டு, சென்னை உள்பட பல்வேறு பகுதிகளில் இருந்தும் 1730 பேருந்துகள் இயக்கப்டுவதாக அரசு போக்குவரத்துக் கழக நிர்வாகம் தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக விரைவு போக்குவரத்து கழக மேலாண் இயக்குநர் ஆர்.மோகன் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது..,
பிப்ரவரி 24-ம் தேதி பவுர்ணமி (சனிக்கிழமை), 25-ம் தேதி (ஞாயிறு) வார இறுதி நாட்கள் என்பதால் சென்னையில் இருந்து திருவண்ணாமலைக்கும், மற்ற இடங்களுக்கும், தமிழகத்தின் பல்வேறு இடங்களில் இருந்து பிற பகுதிகளுக்கும் ஏராளமானோர் பயணம் மேற்கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதைக் கருத்தில் கொண்டு, தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகங்கள் சார்பில் நாள்தோறும் இயக்கப்படும் பேருந்துகளுடன் கூடுதலாக சிறப்பு பேருந்துகளை இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. அதன்படி, சென்னை கிளாம்பாக்கத்தில் இருந்து திருச்சி, கும்பகோணம், மதுரை, திருநெல்வேலி, நாகர்கோவில், கன்னியாகுமரி, தூத்துக்குடி, கோயம்புத்தூர், சேலம், ஈரோடு, திருப்பூர் ஆகிய இடங்களுக்கு 23, 24-ம் தேதிகளில் 1,370 பேருந்துகள், சென்னை கோயம்பேட்டில் இருந்து நாகப்பட்டினம், வேளாங்கண்ணி, ஓசூர், பெங்களூரு ஆகிய இடங்களுக்கு 160 பேருந்துகள், பெங்களூரு, திருப்பூர், ஈரோடு, கோயம்புத்தூர் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் இருந்து பிற பகுதிகளுக்கு 200சிறப்பு பேருந்துகள் என மொத்தமாக 1,730 பேருந்துகளை இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.
25-ம் தேதி ஞாயிறன்று சொந்த ஊர்களில் இருந்து சென்னை, பெங்களூரு திரும்ப வசதியாக பயணிகளின் தேவைக்கு ஏற்ப அனைத்து இடங்களில் இருந்தும் சிறப்பு பேருந்துகள் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. இந்த வார இறுதியில் பயணம் மேற்கொள்ள இதுவரை 16 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் முன்பதிவு செய்துள்ளனர். வரும் 24-ம் தேதி பவுர்ணமியை முன்னிட்டு, அரசு விரைவு போக்குவரத்துக் கழகம் மூலம் கிளாம்பாக்கத்தில் இருந்து திருவண்ணாமலைக்கு 23, 24-ம் தேதிகளில் இருக்கை மற்றும் படுக்கை வசதி உள்ள 30 ஏசி பேருந்துகளை இயக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்த பேருந்துகளில் பயணிக்க www.tnstc.in என்ற இணையதளம், tnstc செயலி மூலமாக முன்பதிவு செய்யலாம். சிறப்பு பேருந்துகள் இயக்கத்தை கண்காணிக்க,குறிப்பிட்ட பேருந்து நிலையங்க ளில் போதிய அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.