மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே சின்னகட்டளை கிராமத்தில் அமைந்துள்ளது. பிரசித்தி பெற்ற சௌர்ணமுத்து மாரியம்மன் கோவில் பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

இக்கோவிலின் சித்திரை திருவிழா நேற்று துவங்கி மூன்று நாட்கள் வெகுவிமர்சையாக நடைபெற்று வருகிறது.
இரண்டாம் நாளான இன்று இத்திருவிழாவின் முக்கிய நிகழ்வான பூக்குழி இறங்கும் நிகழ்வில் நூற்றுக்கணக்கான பக்தர்கள் அக்னி சட்டி ஏந்தியும், அலகு குத்தியும் ஊர்வலமாக வந்து கோவில் முன்பு அமைக்கப்பட்டிருந்த அக்னி குண்டத்தில் பூக்குழி இறங்கி நேர்த்திக் கடன் செலுத்தினர்.
மேலும் 21 அக்னி சட்டி எடுத்து வருதல், குழந்தையை தொட்டிலில் சுமந்து வரும் நேர்த்திக் கடன், மாவிளக்கு மற்றும் ஆயிரம் கண் பானை, பால் குடம் உள்ளிட்ட நேர்த்திக் கடன்களை செலுத்தினர்.
இத்திருவிழாவில் அலங்கரிக்கப்பட்ட சௌர்ணமுத்து மாரியம்மன் சிங்க வாகனத்தில் காட்சி தர மதுரை, தேனி, திண்டுக்கல், விருதுநகர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களிலிருந்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.