• Fri. Mar 29th, 2024

எகிறும் எலுமிச்சை விலை; என்ன காரணம்?

கச்சா எண்ணெய் விலை உயர்வு காரணமாக நாட்டில் பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு ஆகிய எரிபொருள்களின் விலையும் உயர்ந்துள்ளது.இதன் எதிரொலியாக வாகனப் போக்குவரத்து செலவு அதிகமாவதால், அத்தியாவசியப் பொருள்களின் விலையும் அதிகரித்துள்ளது.

ஏற்கெனவே எரிபொருள் விலை உயர்வால் மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள நிலையில், காய்கறிகள் உள்ளிட்ட தினமும் பயன்படுத்தும் அத்தியாவசியப் பொருள்களின் விலையும் உயர்ந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.இதனிடையே குறிப்பிட்ட ஒரு பொருளின் விலை வரலாறு காணாத அளவுக்கு உயர்ந்துள்ளது. நாடு முழுவதும் பெரும்பாலான மாநிலங்களில் எலுமிச்சைப் பழத்தின் விலை அதிகரித்துள்ளது. ஒரு சிறிய எலுமிச்சையின் விலை குறைந்தது ரூ. 10க்கு விற்கப்படுகிறது.

வழக்கமாக கோடைக் காலத்தில் எலுமிச்சையின் தேவை அதிகமாக இருக்கும் என்பதால் எலுமிச்சையின் விலையும் சற்று அதிகரிக்கும். எனினும் கோடையில் தேவை கருதி விளைச்சல் அதிகமாக இருக்கும்.ஆனால், தண்ணீர் பற்றாக்குறை, விலைவாசி உயர்வு உள்ளிட்ட காரணங்களினால் தற்போது எலுமிச்சை சாகுபடி குறைவாகவே செய்யப்படுகிறது. மேலும் எரிபொருள் விலை உயர்வும் இதற்கு முக்கிய காரணம் என்று கூறுகின்றனர் விவசாயிகள்.

ஹைதராபாத்தைச் சேர்ந்த விவசாயி ஒருவர் கூறும்போது, ‘ஒரு மூட்டை எலுமிச்சை ரூ. 700 ஆக இருந்த நிலையில் தற்போது ரூ. 3,500 ஆக உயர்ந்துள்ளது. இதனால் ஒரு எலுமிச்சை ரூ. 10க்கு விற்கப்படும் சூழல் நிலவுகிறது. ஆனால், அவ்வளவு விலைக்கு வாங்க மக்கள் யோசிக்கின்றனர். ஒரு சிலர் மட்டுமே வேறு வழியின்றி வாங்கிச் செல்கின்றனர். நாங்கள் ஒரு மூட்டை எலுமிச்சை ரூ. 3,500-க்கு வாங்கி குறைந்த விலையில் விற்றால் எங்களுக்கு நஷ்டம்தான்’ என்று கூறினார்.’எலுமிச்சைக் காய் வேண்டுமெனால் இரண்டு நாள் இருக்கும்; ஆனால், எலுமிச்சைப் பழம் அன்றைய தினமே விற்றாக வேண்டும். அதிக விலைக்கு விற்பதால் மக்கள் வாங்குவதில்லை. எண்களின் வாழ்வாதாரம் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது’ என்று எலுமிச்சை விற்கும் லட்சுமி கூறுகிறார்.

குஜராத்தில் எலுமிச்சை வரத்து இந்த ஆண்டு மிகவும் குறைந்துள்ளதாக அங்குள்ள வியாபாரிகள் தெரிவிக்கின்றனர். கடந்த ஆண்டு ஆந்திரம், மகாராஷ்டிரம், குஜராத்தில் ஏற்பட்ட புயல்களால் எலுமிச்சை மரங்கள் மிகவும் பாதிக்கப்பட்டதாகவும் இதனால் இந்த ஆண்டு எலுமிச்சைக்கு தட்டுப்பாடும் விலை உயர்வும் இருப்பதாக குஜராத்தைச் சேர்ந்த காய்கறி வியாபாரி தெரிவிக்கிறார்.தமிழகத்திலும் எலுமிச்சை விலை அதிகரித்துள்ளது. சென்னை உள்ளிட்ட பல்வேறு நகரங்களில் ஒரு கிலோ ரூ. 180 முதல் 200-க்கும் ஒரு எலுமிச்சை விலை ரூ. 8 முதல் 10க்கும் விற்பனை ஆகிறது.

எலுமிச்சைக்கு ஆண்டு முழுவதும் தண்ணீர் வேண்டும் என்பதால் சாகுபடிக்கு ஆகும் செலவு இப்போதெல்லாம் அதிகரித்திருப்பதால் விளைச்சல் குறைக்கப்பட்டுள்ளதாக விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.உத்தரகண்டில் எரிபொருள் விலை உயர்வினால் அனைத்து வகையான காய்கறிகளின் விலை உயர்ந்துள்ளதாகவும் எலுமிச்சை விலை கிலோ ரூ. 200-250 க்கு விற்பனை செய்யப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. பாலைவன இடமான ஜெய்ப்பூரில் ஒரு கிலோ எலுமிச்சை விலை ரூ. 400-யை எட்டியுள்ளது.

பெட்ரோல், டீசல் விலை உயர்வும் இந்த ஆண்டு தண்ணீர் பற்றாக்குறை, புயல் உள்ளிட்ட காரணங்களால் எலுமிச்சை சாகுபடி குறைந்துள்ளதும் ஒட்டுமொத்த விவசாயமும் பெரிதாகபாதிக்கப்பட்டுள்ளதும் இந்த விலையேற்றத்துக்குக் காரணமாக வியாபாரிகள் தெரிவிக்கின்றனர்.எலுமிச்சை விலையின் உயர்வினால் கடைகளின் எலுமிச்சைச் சாறின் விலையும் உயர்த்தப்பட்டுள்ளது. ரூ. 10-15க்கு விற்பனை ஆகிக்கொண்டிருந்த அதன் விலை தற்போது ரூ. 30 வரை உயர்ந்துள்ளது.

சாதாரண ஏழை எளிய மக்களுக்கானதாக இருந்த எலுமிச்சை மற்றும் எலுமிச்சை சாறின் விலை அதிகரித்துள்ளது கடும் சிரமத்தை ஏற்படுத்தியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *