பிரபல பாடகர் கே.ஜே. யேசுதாஸ் உடல்நலக் குறைவு காரணமாக சென்னையில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
கேரள மாநிலத்தை சேர்ந்த பாடகர் கே.ஜே.யேசுதாஸ் தனித்துவமான குரல் வளத்தால் உலகம் முழுவதும் ஏராளமான ரசிகர்களைப் பெற்றுள்ளார். மலையாளம்,, தெலுங்கு, தமிழ், கன்னடம், குஜராத்தி, ஒரியா, மராத்தி, பஞ்சாபி, சமஸ்கிருதம் என ஏராளமான மொழிகளில் சுமார் 40 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பாடல்களைப் பாடியுள்ளார்.
இவர் 1962-ம் ஆண்டு வெளியான ‘கால்பாடுகள்’ என்ற மலையாள திரைப்படத்தின் மூலம் பின்னணி பாடகராக அறிமுகமானார். இவர் தமிழில் வீணை பாலச்சந்தரின் ‘பொம்மை’ படத்தில் ‘நீயும் பொம்மை நானும் பொம்மை’ என்ற பாடலை முதன் முறையாக பாடினார். ஆனால், இந்த படம் வெளியாவதற்கு முன்பே ‘கொஞ்சம் குமரி’ படத்தில் இவர் பாடிய பாடல் வெளியானது.
தமிழில் சுமார் 700-க்கும் மேற்பட்ட பாடல்களை யேசுதாஸ் பாடியுள்ளார். எம்ஜிஆர், சிவாஜி, ரஜினி கமல், அஜித், விஜய் என 5 தலைமுறை நடிகர்களுக்கு பாடல் பாடியுள்ளார். இந்த நிலையில் திடீரென ஏற்பட்ட உடல்நலக்குறைவு காரணமாக, கே.ஜே.யேசுதாஸ் சென்னையில் உள்ள மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவருக்கு 85 வயதாகிறது. அவருக்கு ரத்த அணுக்கள் தொடர்பான சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவர் நலமாக இருக்கிறார் என மருத்துவமனை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.