பாடகர் சித்ஸ்ரீராம் மணிரத்னத்தின் அடுத்தப் படத்தில் நாயகனாக நடிக்கயிருப்பதாக ஒரு தகவல் உலவுகிறது.
சித்ஸ்ரீராம் அமெரிக்க பெர்க்லி காலேஜ் ஆஃப் மியூஸிக்கில் பட்டப்படிப்பு முடித்தவர். 2013-ல் வெளியான மணிரத்னத்தின் கடல் படத்தில் தனது முதல் பாடலை பாடினார். அதன் பிறகு தொடர்ச்சியாக தமிழ், தெலுங்கு, கன்னடப் படங்களில் பாடி வருகிறார். சமீபத்தில் சீர்காழி கோவிந்தராஜனின் பாடலைப் பாடி பலரது கண்டனத்துக்கும் ஆளானார்.
பாடகராக அறியப்பட்ட சித்ஸ்ரீராமை தனது தயாரிப்பில் உருவான வானம் கொட்டட்டும் படத்தில் இசையமைப்பாளராக்கினார் மணிரத்னம். ஆனால், அதன் பிறகு அவர் எந்தப் படத்துக்கும் இசையமைக்கவில்லை. இந்நிலையில் மணிரத்னத்தின் அடுத்தப் படத்தில் சித்ஸ்ரீராம் நாயகனாக நடிப்பதாக இன்டஸ்ட்ரியில் ஒரு செய்தி உலவுகிறது.
மணிரத்னம் கல்கியின் பொன்னியின் செல்வன் சரித்திர நாவலை படமாக்கி வருகிறார். இரு பாகங்களாக தயாராகும் இந்தப் படத்தின் முதல் பாகம் முடிவடைந்துள்ளது. தற்போது போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நடந்து வருகின்றன. லைகா, மணிரத்னத்தின் மெட்ராஸ் டாக்கீஸ் இணைந்து தயாரித்திருக்கும் இந்தப் படம் இன்னும் சில மாதங்களில் திரைக்கு வர உள்ளது. பொன்னியின் செல்வனின் இரண்டாம் பாகத்தை எடுக்கும்முன் வேறொரு படத்தை இயக்க மணிரத்னம் திட்டமிட்டுள்ளார். இதன் கதையையும் ஜெயமோகன் எழுதுவதாக கூறப்படுகிறது.
இந்தப் படத்தில் சித்ஸ்ரீராமை அவர் நாயகனாக நடிக்க வைப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. சித்ஸ்ரீராமை பாடகராகவும், இசையமைப்பாளராகவும் அறிமுகப்படுத்தியவர் மணிரத்னம் என்பதால் இந்தத் தகவல் உண்மையாக இருக்கவும் வாய்ப்புள்ளது.