• Sat. Apr 20th, 2024

அமெரிக்கா சுதந்திர தினப் பேரணியில் துப்பாக்கிச்சூடு..!

Byவிஷா

Jul 5, 2022

அமெரிக்காவின் சிகாகோ நகரில் சுதந்திர தினப் பேரணியின் போது நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டில் 6 பேர் உயிரிழந்த நிலையில், துப்பாக்கிச்சூடு நடத்தியதாக சந்தேகப்படும் நபரைக் காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
அமெரிக்க சுதந்திர தினத்தையொட்டி நேற்று சிகாகோ நகரில் பேரணி நடைபெற்றது. அப்போது அப்பகுதியில் உள்ள கட்டடத்தில் இருந்து கூட்டத்தினர் மீது துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டது. இதில் 6 பேர் உயிரிழந்தனர். 20-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இதனைத் தொடர்ந்து, தாக்குதல் நடத்தியதாக சந்தேகிக்கப்படும் நபர் காரில் தப்பி ஓடிய நிலையில், போலீசார் அவரை விரட்டிப் பிடித்தனர். அவரிடமிருந்து உயர் ரக துப்பாக்கி பறிமுதல் செய்யப்பட்டது. கைதான நபரின் பெயர் ராபர்ட் க்ரிமோ ஆகும். அவருக்கு 22 வயதே ஆகிறது. தாக்குதலுக்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதனைத் தொடர்ந்து, வெள்ளை மாளிகையில் சுதந்திர தின உரையாற்றிய அமெரிக்க அதிபர் ஜோ பைடன், “பொருளாதாரம் வளர்ந்து வருகிறது, ஆனால் வலி இல்லாமல் இல்லை. சுதந்திரம் தாக்குதலுக்குள்ளாகி உள்ளது” எனக் குறிப்பிட்டார். “சமீப நாட்களில் இந்த நாடு பின்னோக்கி நகர்கிறது. சுதந்திரம் குறைக்கப்பட்டுள்ளது. பாதுகாக்கப்பட்டதாக நாம் கருதிய உரிமைகள் இனி இல்லை என நினைக்க வேண்டி உள்ளதாகவும் ஜோ பைடன் வருத்தம் தெரிவித்தார். கருக்கலைப்பு தொடர்பான உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு, பாதுகாப்புக்காக கைத்துப்பாக்கி பயன்படுத்த நீதிமன்றம் அனுமதி அளித்தது, காலநிலை மாற்றத்துக்கு எதிரான அரசின் அதிகாரம் குறைக்கப்பட்டது உள்ள பல்வேறு விவகாரங்களை மனதில் வைத்து ஜோ பைடன் இவ்வாறு பேசியுள்ளார்.
இந்த ஆண்டு தொடங்கியதில் இருந்து மட்டும் அமெரிக்காவில் 309 துப்பாக்கிச்சூடு சம்பவங்கள் நடைபெற்றுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *