• Fri. Nov 13th, 2026

மதுரையில் அதிர்ச்சி! பிரபல நகைக்கடையில் 20 கிலோ தங்கம் கொள்ளை..,

ByKalamegam Viswanathan

Nov 13, 2026

மதுரை காளவாசல் – பழங்காநத்தம் புறவழிச்சாலையில் அமைந்துள்ள பிரபல தனியார் நகைக்கடையில் (தனிஷ்க்) நடைபெற்ற பல கோடி ரூபாய் கொள்ளைச் சம்பவத்தின் சிசிடிவி காட்சிகள் தற்போது வெளியாகி சமூக வலைதளங்களில் பெரும் வைரலாகி வருகிறது.

இரும்புச் சாரம் மூலம் துணிகரச் செயல்:
காளவாசல் பைபாஸ் சாலையில் புதிதாகத் திறக்கப்பட்ட இந்த நகைக்கடையில், நேற்று அதிகாலை சுமார் 3 மணியளவில் இந்தச் சம்பவம் அரங்கேறியுள்ளது. கடையின் மேல் தளத்தில் நடைபெற்று வந்த கட்டுமானப் பணிகளுக்காக அமைக்கப்பட்டுள்ள இரும்புச் சாரம் வழியாக மொட்டை மாடிக்கு ஏறிய மர்ம நபர், லிப்ட் அமைக்கும் பாதை வழியாகக் கயிறு கட்டி முதல் தளத்திற்குள் இறங்கியுள்ளார்.

முகமூடி மற்றும் கையுறை அணிந்து கைவரிசை:
தற்போது வெளியாகியுள்ள சிசிடிவி காட்சிகளில், உடல் முழுவதும் கருப்பு உடை, முகமூடி மற்றும் கையுறை அணிந்த நபர் கடைக்குள் நுழைவது பதிவாகியுள்ளது. இரவு நேரக் காவலாளிகள் இருந்தபோதிலும், அபாய மணி (Alarm) ஒலிக்காத வகையில் மிகத் துல்லியமாகத் திட்டமிட்டு இந்தத் கொள்ளை நடந்துள்ளது. லாக்கர்களைத் தொடாமல், ஷோகேஸில் இருந்த சுமார் 15 முதல் 20 கிலோவிற்கும் அதிகமான தங்க மற்றும் வைர நகைகள் பைகளில் அள்ளப்பட்டுள்ளன. கொள்ளையடிக்கப்பட்ட நகைகளின் மொத்த மதிப்பு பல கோடி ரூபாய் இருக்கும் எனக் கூறப்படுகிறது.

இருசக்கர வாகனத்தில் தப்பியோடும் காட்சி வைரல்:
இந்நிலையில், கொள்ளையடிக்கப்பட்ட நகைகளுடன் மர்ம நபர் இருசக்கர வாகனத்தில் (ஸ்கூட்டி) தப்பிச் செல்லும் சிசிடிவி காட்சி தற்போது இணையத்தில் வெளியாகி பெரும் வைரலாகி வருகிறது. மேலும், சம்பவத்திற்குச் சில நாட்களுக்கு முன்பே, அதே நபர் முகமூடி அணிந்து கடையின் சுற்றுப்புறங்களை நோட்டமிட்ட காட்சிகளும் விசாரணையில் சிக்கியுள்ளன. கடை அமைவிடம் மற்றும் பாதுகாப்பு முறைகளை நன்கு அறிந்த நபரே இந்தத் துணிகரச் சம்பவத்தில் ஈடுபட்டிருக்கலாம் என்ற கோணத்தில் இது பார்க்கப்படுகிறது.

வெளிமாநிலங்களுக்கு விரைந்த 9 தனிப்படைகள்:
கொள்ளைச் சம்பவம் குறித்து தகவல் அறிந்ததும், மதுரை மாநகர காவல் ஆணையர் மற்றும் உயர் அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு நேரில் சென்று ஆய்வு நடத்தினர். குற்றவாளிகளைப் பிடிக்க 9 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ள நிலையில், கேரளா, ஆந்திரா மற்றும் மகாராஷ்டிரா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களுக்கும், தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களுக்கும் ஒவ்வொரு தனிப்படைகளும் விரைந்து சென்று வைரலாகும் சிசிடிவி காட்சிகளை அடிப்படையாகக் கொண்டு தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளன.