• Wed. Nov 26th, 2025
WhatsApp Image 2025-11-21 at 00.09.45 (6)
previous arrow
next arrow
Read Now

600க்கு 600 மதிப்பெண்கள் எடுத்து வரலாற்று சாதனை படைத்த மாணவி

ByA.Tamilselvan

May 8, 2023

திண்டுக்கல் அண்ணாமலையார் மகளிர் மேல்நிலைப்பள்ளியைச் சேர்ந்த மாணவி நந்தினி நடந்து முடிந்த பிளஸ்-2 தேர்வில் 600க்கு 600 மதிப்பெண்கள் எடுத்து மாநில அளவில் முதலிடம் பிடித்துள்ளார்.
தனது வெற்றி குறித்து மாணவி நத்தினி தெரிவிக்கையில் …, எனது தந்தை சரவணக்குமார் தச்சுத் தொழிலாளி. தாயார் பானுப்பிரியா குடும்ப தலைவி. நான் 1ம் வகுப்பு முதல் பிளஸ்-2 வரை இதே பள்ளியில்தான் படித்தேன். 10ம் வகுப்பு அரசு பொதுத்தேர்வு தொடங்கியது முதல் படிப்பில் முழு கவனம் செலுத்த ஆரம்பித்தேன். விளையாட்டு உள்ளிட்ட எந்தவித பொழுது போக்கு விஷயத்திலும் கவனம் செலுத்த மாட்டேன். எங்கள் வீட்டில் எனக்காக அரசு பொதுத்தேர்வு சமயங்களில் டி.வி. பார்ப்பதை அனைவரும் தவிர்த்து விட்டனர். பள்ளி வகுப்பறைகளில் பாடம் எடுக்கும் போது ஏற்படும் சந்தேகங்களை உடனுக்குடன் ஆசிரியர்களிடம் கேட்டு தெளிவு பெற்று விடுவேன். அதன் பிறகு வீட்டுக்கு வந்து அன்றைக்கு நடத்திய பாடங்களை அன்றே படித்து முடித்து விடுவேன். தேர்வு சமயங்களில் கூடுதல் நேரம் எடுத்து படித்து வந்தேன். சாதிக்க வேண்டும் என்ற தன்னம்பிக்கையுடன் முயற்சி செய்தால் யார் வேண்டுமானாலும் அதிக மதிப்பெண்கள் பெறலாம்.
இதையே எனது தோழிகளுக்கு கூறி வந்துள்ளேன். தற்போது எனக்கு கிடைத்துள்ள மதிப்பெண்களுக்கு ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்களே காரணம். இதன் பின்பு ஆடிட்டராகி எனது சொந்தக்காலில் நிற்க உள்ளேன். இதுவரை எனது படிப்புக்காக எனது பெற்றோர் மிகவும் கஷ்டப்பட்டுள்ளனர். அவர்களை நல்ல நிலைக்கு கொண்டு வர வேண்டும் என்பதே எனது குறிக்கோளாகும் என்றார். சாதனை படைத்த மாணவி நந்தினிக்கு பள்ளி ஆசிரியர்கள் மற்றும் தோழிகள் இனிப்பு வழங்கி பாராட்டுகளை தெரிவித்தனர்.