• Tue. May 30th, 2023

ஜெயலலிதாவை முன் வைத்து சசிகலா நடத்திய அரசியலை சொல்லும் ‘செங்களம்’

Byதன பாலன்

Mar 27, 2023

எஸ்.ஆர்.பிரபாகரன் இயக்கத்தில் ஜீ-5 ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ள புதிய இணையத் தொடர் ‘செங்களம்’.
இந்த இணையத் தொடரில் வாணி போஜன், கலையரசன், ஷரத் லோஹிஸ்டாஷ்வா, விஜி சந்திரசேகர், ஷாலி நிவேகாஸ், மானஷா ராதாகிருஷ்ணன், வேலா ராமமூர்த்தி, பக்ஸ், முத்துக்குமார், டேனியல் அன்னி போப், பவன், பிரேம், கஜராஜ், மற்றும் பூஜா வைத்தியநாதன் ஆகியோர் நடித்துள்ளனர்.
தமிழகத்தில் தலைமுறை, தலைமுறையாக நாம் பார்த்து வரும் குடும்ப அரசியல்தான் இந்தப் படத்தின் களம்.
அரசியல் பதவிக்காகவும், அதன் மூலம் கிடைக்கும் அதிகாரத்திற்காகவும், இதை இரண்டையும் வைத்து சம்பாதித்துக் குவிக்கும் பணத்துக்காகவும் அரசியல்வாதிகள் எத்தகைய கீழான செயலையும் செய்யத் தயங்க மாட்டார்கள் என்பது தமிழக மக்கள் அறிந்ததுதான்.அந்தக் கேடு கெட்ட அரசியலை.. நாம் பார்த்துப், பார்த்துச் சலித்துப் போயிருக்கும் இந்தக் கேவலங்கெட்ட அரசியலை மொத்தமாக 9 எபிசோடுகளில் கிட்டத்தட்ட ஐந்தரை மணி நேரத்தில் நமக்குத் தொகுத்தளித்துள்ளார் இயக்குநர் எஸ்.ஆர்.பிரபாகரன்.விருதுநகர்தான் கதை நடக்குமிடம். விருதுநகர் நகராட்சி மன்றத் தலைவராக இருப்பவர் ராஜமாணிக்கம்(பவன்). இவரது குடும்பம்தான் இந்த நகராட்சியை கடந்த 40 ஆண்டுகளாக ஆண்டு வருகிறது,ராஜமாணிக்கத்தின் அப்பா சிவஞானம் மற்றும் அவரது தாத்தா என அவர்களது மொத்தக் குடும்பமே பரம்பரை, பரம்பரையாக அரசியலில் உள்ளனர். அதே தொகுதியில் ஆளுங்கட்சி எம்.எல்.ஏவாக இருக்கும் கணேசமூர்த்திக்குக்கூட(வேல ராமமூர்த்தி) தொகுதியில் இல்லாத செல்வாக்கு, நகராட்சி மன்ற தலைவரான ராஜமாணிக்கத்திற்கும், அவரது குடும்பத்திற்கும் இருக்கிறது.இப்போது தமிழகத்தை ஆளும் அரசியல் கட்சியின் சட்டமன்ற உறுப்பினராக இருந்தும் விருதுநகரில் தலை நிமிர முடியவில்லையே என்ற கோபத்தில் இருக்கும் வேல ராமமூர்த்தி, எப்படியாவது இந்த அரசியல் குடும்பத்தை ஒழிக்க வேண்டும் என முடிவு கட்டுகிறார்.
இந்த நிலைமையில் நகராட்சி தலைவரான ராஜமாணிக்கத்திற்கும், சூர்யகலாவிற்கும்(வாணி போஜன்) திருமணம் நடக்கிறது. தொடர்ந்து ராஜமாணிக்கமும், சூர்யகலாவும் கொடைக்கானல் மலைக்கு ஹனிமூன் செல்கையில் விபத்து ஏற்பட்டு ராஜமாணிக்கம் உயிரிழக்கிறார். ஆனால், சூர்யகலா பிழைத்து கொள்கிறார்.இப்போது அடுத்த நகராட்சி மன்ற தலைவர் யார் என்ற கேள்வி எழுகிறது. குடும்பத் தலைவரான சிவஞானம் இதற்காக ஒரு திட்டம் தீட்டுகிறார்.
ஆனால் அதற்குள் சூர்யகலாவுக்கு பதவி ஆசை கொஞ்சம், கொஞ்சமாக பற்றிக் கொள்கிறது. இதனை தெரிந்து கொண்ட சிவஞானம் தலைவர் யார் என்பதை கவுன்சிலர்களிடம் சொல்வதற்குள்ளாகவே தனது உடன் பிறவா தோழியான நாச்சியாரின் துணையோடு சூர்யகலா, நகராட்சித் தலைவராக அறிவிக்கப்படுகிறார்.சூர்யகலாவின் இந்தப் பாய்ச்சல்தான் விருதுநகர் நகராட்சியை மட்டுமல்ல.. அந்த மாவட்ட அரசியலையே அசைத்துப் பார்க்கிறது.இதன் பின் விளைவுகளாக நாச்சியாரின் உடன் பிறந்த சகோதகரர்களான கலையரசன், டேனியல், லகுபரன் மூவரும் அதே விருதுநகரின் முக்கிய அரசியல் முக்கிய பிரமுகர்களை தொடர் கொலைகளை செய்து தலைமறைவாகிவிடுகிறார்கள். இவர்களை உயிருடனோ, அல்லது சுட்டுப் பிடிக்கவோ காவல் துறை முயல்கிறது.இந்தக் கொலைகள், கொலைகளுக்கான காரணங்கள், தேடுதல் வேட்டைகள் ஆகியவைகளைத்தான் பல திருப்பங்கள் நிறைந்த இந்த இணையத் தொடரின் திரைக்கதையில் சொல்லியிருக்கிறார்கள்.தொடரின் முதன்மை கதாப்பாத்திரமான சூர்யகலாவாக நடித்திருக்கும் வாணி போஜன் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவை நினைவுப்படுத்துவது போல் காட்சிப்படுத்தப்பட்டிருக்கிறார். அவருடைய தோழியான நாச்சியார் உடன் பிறவா சகோதரி சசிகலாவை நினைவுப்படுத்தும்விதமாக நடிக்க வைக்கப்பட்டிருக்கிறார். நல்லவேளையாக அ.தி.மு.க. இப்போது ஆட்சியில் இல்லை என்பதால் தப்பித்தார் எஸ்.ஆர்.பிரபாகரன்.
வாணியின் தோழியாக நடித்திருக்கும் ஷாலி நிவேகாஸ் செய்யும் அரசியல் தகிடுதத்தங்கள், அந்தக் குடும்பத்தை மட்டுமல்ல. தொடரை பார்ப்பவர்களைக்கூட கொஞ்சம் அசைத்துப் பார்க்கிறது.நிகழ் காலத்தின் நாயகனாக ராயர் என்ற கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் கலையரசன் தனது கதாபாத்திரத்திற்கேற்ற நடிப்பைக் காண்பித்திருக்கிறார். இன்ஸ்பெக்டர் அர்ஜூக்கு செக் வைத்து அவர் பேசும் பேச்சு ருசிகரமானது. அதேபோல் சில இடங்களில் அர்ஜுக்குத் தண்ணி காட்டும் காட்சிகளில் ராயர் கதாப்பாத்திரத்திற்கு நியாயம் செய்திருக்கிறார். அவரது தம்பிகளான டேனியலும், லகுபரனும்கூட தங்களது காட்சிகளில் குறையில்லாமல் நடித்திருக்கிறார்கள். லகுபரன் அம்மா பாசத்தில் அழும் கடைசி பிள்ளைக்கான குணாதிசயத்தைக் காட்டியிருக்கிறார். டேனியல் முதல்முறையாக குணச்சித்திர கதாப்பாத்திரத்தில் ஒன்றிப் போயிருக்கிறார்.
குடும்பத் தலைவர் சிவஞானமாக சக்கர நாற்காலியிலேயே வலம் வரும் சரத் லோகிதாஸின் கதாபாத்திரமும், கருணாநிதி குடும்பத்தை அடையாளம் காட்டுகிறது. இவருடைய ஒட்டு மொத்தக் குடும்பமும் நடத்தும் அரசியல்களை இன்றைய நிலைமையுடன் ஒப்பிட்டுப் பார்த்தால் திரையில் கொஞ்சம்தான் காட்டியிருக்கிறார் இயக்குநர்.
சரத் லோகிதாஸ் சில காட்சிகளில் நல்லவராகவும், சில காட்சிகளில் கெட்டவராகவும் காட்டப்பட்டிருக்கிறார். இதுவே இவர் மீதான நம்பகத்தன்மையைக் கெடுத்திருக்கிறது. மேலும் பல சினிமாக்களில் அவர் காட்டிய நடிப்பில் பாதியைக்கூட இதில் காட்டவில்லை என்பது வருத்தமான விஷயம்.
கிராமத்து அம்மா கதாப்பாத்திரத்திற்கு விஜியை நேர்ந்துவிட்டார்கள் போலிருக்கிறது. விஜி சந்திரசேகர் எப்போதும் தனது கதாப்பாத்திரத்திற்கு 100 சதவிகிதம் நிறைவைக் கொடுப்பார். இந்தப் படத்திலும் அதையே செய்திருக்கிறார்.
அந்தக் கரிசல் காட்டு மொட்டை வெயிலில் மகன்கள் சாப்பிடாமல் இருப்பார்களே என்றெண்ணி சாப்பாடு எடுத்துச் செல்வதும், மகன்கள் திட்டுவதைக்கூட கண்டு கொள்ளாமல் அவர்களை சாப்பிட வைக்கும் தாய்மையுணர்வை அப்படியே வெளிப்படுத்தியிருக்கிறார் விஜி.இவருடைய மரணக் காட்சியைப் படமாக்கியவிதமும், அதில் விஜியின் முகம் காட்டும் அதிர்ச்சி கலந்த கொடூரம் நம் கண்ணைவிட்டு இன்னமும் அகலவில்லை.வேல ராமமூர்த்தி எப்போதும் போல அதே கெத்தான அரசியல்வாதி கதாப்பாத்திரத்தை கச்சிதமாக செய்திருக்கிறார். அவருடைய முகத் தோற்றமும், உடல் தோற்றமும் வேறு யாரையும் இந்த அரசியல்வாதி கதாப்பாத்திரத்திற்கு தேர்வு செய்யவிடாது என்பது மட்டும் உண்மை.
மாவட்டச் செயலாளர் பணத்தைக் கொடுக்காமல் ஏமாற்றியிருப்பாரோ என்றெண்ணி சந்தேகமாக அவரைப் பார்க்கின்ற காட்சியில் வெடி சிரிப்பு வருகிறது. இவருடைய மரணம் ஒரு பரிதாபத்தை ஏற்படுத்தியிருக்க வேண்டும். அது இங்கே மிஸ்ஸிங்..!
மேலும் பவன், பத்திரிகையாளர் சு.செந்தில்குமரன், ஷாலி நிவேகாஷ், முத்துக்குமார், கஜராஜ், பிரேம், பூஜா வைத்தியநாதன், அர்ஜை என தொடரின் பல்வேறு எபிசோடுகளில் வலம் வந்து நடித்திருக்கும் அனைத்து நடிகர்களும் அவரவர் கதாப்பாத்திரத்தை கவனிக்க வைக்கிறார்கள். இவர்கள் மட்டுமல்லாமல் அடிக்கடி வந்து போகும் சின்னச் சின்ன கேரக்டர்களில் நடித்தவர்கள்கூட சிறப்பாகவே நடித்துள்ளனர்.
ஒளிப்பதிவாளர் வெற்றிவேல் மகேந்திரனின் கேமிரா விருதுநகர் மாவட்ட கரிசல் பூமியையும், வறண்டு போயிருக்கும் மண்ணையும் காட்சிப்படுத்தியிருக்கிறது. விருதுநகர் பகுதியின் சுற்று வட்டாரங்கள், காடு, மலை, அணைக்கட்டு என்று தனது கேமிராவின் கழுகுப் பார்வையில் அனைத்தையும் சுற்றிச் சுற்றி படமாக்கியிருக்கிறார் வெற்றிவேல் மகேந்திரன்.
தரணின் பின்னணி இசை அரசியல் களத்திற்கு பொருத்தமாக உள்ளது. வாணி போஜன் சம்பந்தப்பட்ட கடந்த கால காட்சிகளுக்குத் தனியாகவும், கலையரசன் தொடர்பான தற்போதைய கதைக்குத் தனியாகவும் பின்னணி இசையை கொடுத்து வித்தியாசமான உணர்வை அடுத்தடுத்துக் கொடுத்து நம்மை தொடரை முழுமையாக பார்க்க வைத்திருக்கிறார்.படத் தொகுப்பாளர் பிஜு வி.டான்பாஸ்கோவின் படத் தொகுப்பும் படத்தின் மிகப் பெரிய பலத்தை சேர்த்துள்ளது.கடந்த 30 வருடங்களில் தமிழகத்தில் நடைபெற்ற பல அரசியல் சம்பவங்களை நம் கண் முன்பாக நிறுத்திவிட்டது இந்த செங்களம் தொடர்.ஒருவரையொருவர் போட்டுக் கொடுப்பது. சாகடிப்பது.. லஞ்சம் கொடுப்பது.. வாங்குவது.. எதிர்க்கட்சியாக இருந்தாலும் கட்டிங்கிற்காக தனது சக கட்சிக்காரனையே போட்டுக் கொடுப்பரது.. போலீஸ்-அரசியல்வாதிகள் தொடர்பு, மக்களுடைய ஏமாளித்தனம், பதவி, அதிகாரம், பணம் என்று வந்துவிட்டால் குடும்பம், அண்ணன், தம்பி, தங்கை, அக்காள் என்று யாரையும் பார்க்காமல் ஏறி, மிதித்துவிட்டுப் போகும் அரசியல்தனம் என்று அனைத்தையும் இந்த இணையத் தொடரின் முதல் சீஸனில் வெளிச்சம் போட்டுக் காட்டியிருக்கிறார் இயக்குநர்.கலையரசன் செய்யும் தொடர் கொலைகளுக்கான காரணம் என்ன? பவனின் மரணத்தில் மறைந்திருக்கும் மர்மம் என்ன? வாணி போஜனின் திடீர் அரசியல் அவதாரமும், அதனை தொடர்ந்து நகராட்சியிலும், வீட்டிலும் ஏற்படும் திடீர் திருப்பங்கள்… இதனால் அடுத்தடுத்த பாகங்களில் என்ன நடக்கப் போகிறது என்ற எதிர்பார்ப்புதான் அடுத்தடுத்த பாகங்களை ஆர்வத்துடன் பார்க்க வைத்திருக்கிறது.அரசியலில் இருப்பவர்களுக்கு பதவியும், அதிகாரமும் எவ்வளவு பெரிய போதை என்பதை அப்பட்டமாக கூறியுள்ள இயக்குநரை நாம் பெரிதும் பாராட்டத்தான் வேண்டும்.எந்த உண்மை சம்பவத்தையும் மையப்படுத்தி சொல்லாமல், இது முழுக்க முழுக்க கற்பனையான அரசியல் கதை என்றாலும், இத்தொடரின் ஒவ்வொரு காட்சியும், இதில் இருக்கும் அனைத்துக் கதாபாத்திரங்களும் தமிழகத்தின் மறைந்த, தற்போது உயிருடன் இருக்கும் முக்கிய அரசியல் புள்ளிகளை நினைவுப்படுத்துவதை போல அமைந்திருப்பது இத்தொடருக்கு கூடுதல் சுவாரஸ்யத்தை கொடுத்திருக்கிறது.
உண்மையாகச் சொல்லப் போனால் ஜெயலலிதாவுக்கும், அவருடன் உடன் பிறவா சகோதரியாக இருந்த சசிகலாவுக்கும் இடையே இருந்த உறவை மையமாக வைத்துதான் இந்தக் கதையை எழுதியிருக்கிறார் இயக்குநர் பிரபாகரன்.
எந்த அரசியல் தலைவர்களையும் நேரடியாக பெயர் சொல்லிக் குறிப்பிடவில்லை என்றாலும், கேரக்டர் ஸ்கெட்ச் மற்றும் வசனங்களின் மூலமாக இயக்குநர் யாரை குறிப்பிடுகிறார் என்பது நமக்கு மிக தெளிவாகவே புரிகிறது.
வாணி போஜனின் அரசியல் முன்னேற்றத்திற்கு வழி வகுக்கும் அவரது உடன் பிறவா தோழியின் சாமர்த்தியமான திரைக்கதையும், புத்திசாலித்தனமான வசனங்களும் பார்வையாளர்களைக் கவர்கின்றன. அதோடு தோழியின் ஒவ்வொரு அரசியல் நடவடிக்கையும் நிஜத்தில் நடந்தது போலவே இருப்பது நமக்கு ஆச்சரியத்தைத் தருகிறது.
ஒரு கட்டத்தில் இந்த இணையத் தொடர் தற்போதைய ஆளும் கட்சியான தி.மு.க.வுக்கு ஆதரவானதாக எடுக்கப்பட்டதோ என்று நினைக்கும் வகையில் தற்போதைய அ.தி.மு.க. தலைவர்களை கிண்டல் செய்யும் காட்சிகள் அதிகமாக இருப்பது நமக்கு ஆச்சரியத்தைத் தருகிறது.மேலும் மெயின் ஸ்டீரிமான வெள்ளித்திரையில்கூட யாரும் கேட்காமல் இருக்கும், ஜெயலலிதாவின் மரணத்திற்கு யார் காரணம் என்ற கேள்விக்கு தன் பாணியில் விடையை சொல்லியிருக்கும் இயக்குநரின் தைரியத்தை நாம் நிச்சயம் பாராட்டியே ஆக வேண்டும்.எப்படியெல்லாம் கவுன்சிலர்களை நகராட்சித் தலைவர்களும், துணைத் தலைவர்களும் கையாள்கிறார்கள் என்பதை ஒரு காட்சியில் பட்டவர்த்தனமாய் காட்டியிருக்கிறார் இயக்குநர். அனைத்து கவுன்சிலர்களுக்கும் லஞ்சப் பணம் தரப்பட்டு இனிமேல் இது தொடர்ந்து நடக்கும் என்று உடன் பிறவா தோழி சொல்வதெல்லாம் சென்னையில் போயஸ் கார்டன் வீட்டில் நடந்ததுதானே..!சரத் லோகிதாஸ் அழைப்புவிடுத்த அதே நேரத்தில் தன் வீட்டில் அதே கவுன்சிலர்களை அழைத்து உடன் பிறவா தோழியான நாச்சியார் தன்னுடைய ஆதரவாளர்களாக அவர்களை மாற்றுவது செமத்தியான அரசியல் ஸ்டோரி.
திரைப்படத்திற்காக எழுதப்பட்ட ஒரு கதையை 9 பாகங்கள் கொண்ட தொடராக மாற்றுவதற்காக சில காட்சிகளை கூடுதலாக சேர்த்திருப்பது சில இடங்களில் சற்று தொய்வை ஏற்படுத்துவதோடு, ஒவ்வொரு எபிசோடுகளிலும் நிகழ்கால கதையுடன், கடந்த கால கதையும் இணைந்து இடம் பெறுவது துவக்கத்தில் சுவாரஸ்யமாக இருந்தாலும் போகப் போக ஒருவித அலுப்பை கொடுத்துவிட்டது. தொடர்ந்து அரசியல் தொடர்பான சம்பவங்களாகவே நடப்பதால் எது கடந்த கால கதை.. எது நிகழ்காலக் கதை என்ற குழப்பமும் சிற்சில இடங்களில் ஏற்பட்டுவிட்டது.தொடரின் இறுதி பாகத்தில் ஒரு திருப்பு முனையை வைத்து, ரசிகர்கள் மனதில் பல கேள்விகளையும் எழுப்பி அடுத்த சீஸனுக்கும் அச்சாரம் போட்டிருக்கிறார் இயக்குநர். காத்திருப்போம்..!
இந்த ‘செங்களம்’ உண்மையிலேயே தமிழக அரசியலின் ‘செங்களம்’தான்..!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *