• Thu. Apr 25th, 2024

இன்னோசன்ட் காலமானார்

Byதன பாலன்

Mar 27, 2023

இந்திய சினிமாவில்ஐந்து தலைமுறை நடிகர்களுடன் நடித்த பிரபல மலையாளகுணசித்திர நடிகர் இன்னோசன்ட்(75) நேற்று மாலை திருவனந்தபுரத்தில்
(27.03.2023) காலமானார். மலையாளம், தமிழ், இந்தி, கன்னடம் என நான்கு மொழி திரைபடங்களிலும் சுமார் 750 படங்களில் நகைச்சுவை, குணசித்திர கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார் இன்னோசன்ட் மலையாளத்தை தாய் மொழியாக கொண்ட இவர் கேரள மாநிலம் சாலக்குடி அருகில் உள்ள இரிங்கால குடா நகர் இவரது பிறந்த ஊராகும். மலையாள நட்சத்திரங்கள் அங்கம் வகிக்கும் அம்மா சங்கத்தின் தலைவராக பதவி வகித்துள்ளார்.நடிகராக மட்டுமல்லாது, பொது சேவைகளில் தன்னை ஈடுபடுத்திக்கொண்டதால் 2014 ஆம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் சாலக்குடி தொகுதியில் இடது முன்ணணியின் ஆதரவு பெற்ற சுயேட்சை வேட்பாளராக போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளார் புற்றுநோய் பாதிப்புக்குள்ளான இன்னோசன்ட் 2012ஆம் ஆண்டு தொண்டை புற்றுநோய் ஏற்பட்டு அதற்காக சிகிச்சை எடுத்துகொண்டு அதில் இருந்து தற்காலிகமாக மீண்டார்.

இன்னோசன்ட் புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நம்பிக்கை அளிக்கும் நட்சத்திரமாக விளங்கினார்.நடிகராக, அரசியல்வாதியாக, திரைப்பட தயாரிப்பாளராக, நடிகர் சங்க தலைவராக பன்முக தன்மையுடன் தனது பணிகளை மேற்கொண்ட இன்னோசன்ட் “சிரிப்புக்கு பின்னால்” என்ற சுயசரிதை நூலையும், ‘நான் அப்பாவி’,’ மழை கண்ணாடி,நான் இன்னோசென்ட், கேன்சர் வார்டில் சிரிப்பு, இரிங்காலக் குடாவைச் சுற்றி, கடவுளை தொந்தரவு செய்யாதே, காலனின் டில்லி பயணம், போன்ற புத்தகங்களையும் எழுதியுள்ளார்.
கடந்த சில நாட்களுக்கு முன்பு உடல் நலக்குறைவு ஏற்பட்டதால் இன்னோசென்ட் மருத்துவ சிகிச்சைக்காக திருவனந்தபுரத்தில் தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார் இரண்டு வாரங்களாக மருத்துவ கண்காணிப்பில், சிகிச்சையளிக்கப்பட்டு வந்த இன்னோசென்ட் உடல்நிலையில் முன்னேற்றம் இல்லை என்றே மருத்துவர்கள் தெரிவித்திருந்தனர் .இன்னோசென்ட் காலமானதை உறுதிப்படுத்தி மருத்துவமனை வெளியிட்டுள்ள அறிக்கையில் மார்ச் மாதம் முதல் இன்னொசன்ட்டின் உடல்நிலை மோசமடைந்து வந்தது. நுரையீரல் தொடர்பான நோய்களுடன் உறுப்புகள் செயல் இழந்த நிலையில் தீவிர சிகிச்சைப்பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவந்தார்.இந்நிலையில் இன்று அவர் இதயநோய் காரணமாக மரணடைந்தார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *