• Thu. Jun 8th, 2023

‘பருந்தாகுது ஊர்க் குருவி’ – சினிமா விமர்சனம்

Byதன பாலன்

Mar 26, 2023

டிஜிட்டல் மார்க்கெட்டிங் துறையில் முன்னணி நிறுவனமாக வலம் வரும் Lights On Media நிறுவனம், தனது முதல் படைப்பாக இப்படத்தை தயாரித்துள்ளது. தயாரிப்பாளர்கள் E.A.V.சுரேஷ், சுந்தர கிருஷ்ணா, P.வெங்கி சந்திரசேகர் ஆகியோர் இணைந்து இப்படத்தை தயாரித்துள்ளனர்.
படத்தில் நிஷாந்த் ரூஷோ, விவேக் பிரசன்னா இருவரும் முதன்மை கதா பாத்திரங்களில் நடித்துள்ளனர்.

மும்பையைச் சேர்ந்த மாடல் அழகியான காயத்ரி ஐயர் இப்படத்தில் நாயகியாக நடித்திருக்கிறார். மேலும் ‘ராட்சசன்’ வினோத் சாகர், அருள் D.சங்கர், கோடங்கி வடிவேல், E.ராம்தாஸ் ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடித்துள்ளனர்.

இயக்குநர் ராமிடம் உதவி இயக்குநராக பணியாற்றிய தனபாலன் கோவிந்தராஜ் இப்படத்தின் கதை திரைக்கதை எழுதி இயக்கியிருக்கிறார்.

“ஊர்க் குருவி ஒருபோதும் பருந்தாகாது” என்பது உலகம் தழுவிய பொதுவான கருத்து.
அந்த ஊர்க் குருவியாய் ஊருக்குள்ளேயே சின்னச் சின்னத் திருட்டுக்களை செய்து வரும் ஒரு திருடன், ஒரு பெரிய தொகைக்காக மிகப் பெரிய வேலையொன்றை செய்யத் துணிகிறான். இதுதான் படத்தின் கதைக் கரு.

ஒரு உண்மை சம்பவத்தின் அடிப்படையில் இந்தப் படம் உருவாக்கியுள்ளதாம். கேங்ஸ்டர் கூட்டம், அரசியல்வாதிகள், போலீஸ் என மூவரால் தேடப்படும் ஒருவனுக்கும், முன் பின் தெரியாத ஒரு இளைஞனுக்கும் காட்டில் ஏற்படும் நட்பு, அதனை தொடர்ந்த அடுத்த கட்ட நிகழ்வுகளும்தான் இந்தப் படத்தின் கதை.

அந்தக் காட்டுக்குள் அவர்கள் சிக்கியது ஏன்..? எதிரிகளிடமிருந்து தப்பித்தார்களா..? என்பதை ஒரு நாளுக்குள் நடக்கும் நிகழ்வுகளாக சொல்லியிருக்கிறார்கள்.

பிரபல நடிகையான யாமினி அவர் நடத்தி வந்த நிறுவனத்தில் வேலை பார்த்த பெண்களை பாலியல் கொடுமைக்கு உள்ளாக்கியதாக புகாருக்கு உள்ளாகிறார். இது தொடர்பாக போலீஸ் விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

இந்த நிலையில் தனது கணவரான மாறனை(விவேக் பிரசன்னா) சில நாட்களுக்குத் தலைமறைவாக இருக்கும்படி சொல்லி அவரை ஊட்டி, கூடலூர் அருகேயிருக்கும் ஒரு எஸ்டேட்டுக்கு அனுப்பி வைக்கிறார் யாமினி.

அதே ஊரில் சாதாரண பிக்பாக்கெட் அடிப்பவராக வாழ்ந்து வருகிறார் ஆதி(நிஷாந்த் ரூசோ). ஊரில் இருக்கும் போலீஸ் ஸ்டேஷனில் ஏதாவது சின்னச் சின்னத் திருட்டு வழக்குகளில் அவ்வப்போது ஆதியை லின்க் செய்வது போலீஸாரின் வழக்கம். அதனால் அந்த ஊர் போலீஸ் ஸ்டேஷனில் இருக்கும் அனைத்து போலீஸாருக்கும் நன்கு பழக்கமானவர் ஆதி.

எஸ்டேட்டுக்கு வந்திருக்கும் மாறன் திடீரென்று ஒரு கும்பலால் கொடூரமாகத் தாக்கப்படுகிறார். தாக்குதலின் இறுதியில் மாறன் இறந்துவிட்டதாக நினைத்து அவர்கள் தப்பியோடி விடுகின்றனர்.

இந்நிலையில் ஆதி அன்றைய தினம் காவல் நிலையத்தில் கையெழுத்து போட செல்கிறார். அந்த நேரத்தில் மிளகு தோட்டத்தில் ஒரு பிணம் கிடப்பதாக போலீஸூக்குத் தகவல் வருகிறது.

மிளகு தோட்டத்தை அடையாளம் காட்டச் சொல்லி சப்-இன்ஸ்பெக்டர் போஸ்,. ஆதியை அந்த இடத்திற்கு அழைத்துச் செல்கிறார். அங்கே மாறன் மயங்கிய நிலையில் கிடக்கிறார். இவர் இறந்து கிடக்கிறார் என்று நினைத்த போஸ், மாறனின் கையையும், ஆதியின் கையையும் இணைத்து கை விலங்கு போட்டுவிட்டு போன் பேசிவிட்டு வருவதாகச் சொல்லி செல்போன் டவர் சிக்னல் கிடைக்கும் பகுதியைத் தேடிச் செல்கிறார்.

அந்த நேரத்தில் மாறன் உயிரோடு இருப்பது ஆதிக்கு தெரிய வருகிறது. மாறன் ஆதியிடம் தன்னை எப்படியாவது காப்பாற்றும்படி கேட்கிறார். அதே நேரத்தில் மாறனின் செல்போனுக்கு அழைக்கும் யாமினி, மாறன் உயிரோடு இருப்பதை அறிந்து ஆதியிடம், “10 லட்சம் தருகிறேன். அவரை எப்படியாவது காப்பாற்றுங்கள்” என்று கெஞ்சுகிறார்.

சாதாரண பிக்பாக்கெட் அடிக்கும் கிரிமினலான ஆதி, 10 லட்சம் என்றவுடன் லம்ப்பாக இந்தத் தொகையை வாங்க நினைத்து மாறனைத் தூக்கிக் கொண்டு
அந்த இடத்திலிருந்து எஸ்கேப்பாகுகிறார். சப்-இன்ஸ்பெக்டர் போஸ் திரும்பி வந்து பார்க்கும்போது ஆதியும், மாறனும் அங்கே இல்லாதிருப்பதைக் கண்டு திகைக்கிறார்.

ஆதியாக நடித்திருக்கும் நாயகன் நிஷாந்த் ரூசோ தனது சிறப்பான நடிப்பை வழங்கியுள்ளார். ஒளிப்பதிவாளரைவிடவும் இவர்தான் அதிகமாக உழைத்திருக்கிறார். பாதி படம் முழுவதும் விவேக் பிரசன்னாவை முதுகில் தூக்கி சுமந்து கொண்டேயிருக்கிறார். இந்தக் காட்சிகளில் ஆதியின் கடுமையான உழைப்பு தெரிகிறது.

யார், எதற்கு தன்னையும் தேடி வந்து கொலை செய்ய முயற்சிக்கிறார்கள் என்பதை அறியாமலேயே கோபப்படும் காட்சியிலும், ஒரு கட்டத்தில் பணமே வேண்டாம். உயிர் தப்பினால்போதும் என்று நினைத்து விவேக்கிடம் சண்டையிடும் காட்சியிலும் இயல்பான நடிப்பைக் காண்பித்திருக்கிறார்.

அவருடைய வெறித்தனமான கண்களே சில காட்சிகளில் நம்மை வெகுவாக ரசிக்க வைத்திருக்கிறது.இத்தனை குத்து பட்டும் உயிருக்குப் போராடும் விவேக் பிரசன்னாவின் அமைதியான நோயாளி நடிப்பும், தன் மனைவி பற்றிய உண்மையை அறிந்த பின்பு தான் காதல் கொண்ட கதையைச் சொல்லி வருத்தப்படும் காட்சியிலும் உச்சுக் கொட்ட வைத்திருக்கிறார்.

காயத்ரி ஐயரின் மனைவி
கம் வில்லி கதாப்பாத்திரமும் ரசிக்கும்படியுள்ளது. இவரும் ஈ.ராமதாஸூம் பேசும் காட்சி மிக இயல்பானது. படபட இன்ஸ்பெக்டரான ‘ராட்சசன்’ வினோத் சாகர் சப்-இன்ஸ்பெக்டர் போஸை திட்டிக் கொண்டேயிருக்கிறார். திட்டு வாங்கும் சப்-இன்ஸ்பெக்டர் போஸ் கதாப்பாத்திரத்தில் நடித்திருக்கும் கோடங்கி வடிவேல் தனது இயல்பான நடிப்பால் ரசிக்க வைக்கிறார். ஆனால், இந்த அளவுக்கு ரோஷமே இல்லாதவராக யாராவது வாழ முடியுமா என்பது சந்தேகம்தான்.

ஒளி்ப்பதிவாளரின் பணி மிகச் சிறப்பானது. அந்தக் கூடலூர் காட்டை அவ்வளவு அழகாகப் படம் பிடித்திருக்கிறார். பாதி காட்சிகளில் கதாப்பாத்திரங்கள் ஓடிக் கொண்டேயிருப்பதால் ஒளிப்பதிவாளரின் நிலைமையை நினைத்தால் பாவமாகத்தான் தோன்றுகிறது. அவர்களைவிடவும் அதிமாக இவர்தான் ஓடியிருக்க வேண்டும்.
ரஞ்சித் உன்னியின் இசையில் இரண்டு பாடல்களுமே கேட்கும் ரகம். பின்னணி இசையும் கதையின் ஓட்டத்திற்கு கூடுதல் பலம் சேர்த்திருக்கிறது. தேடுதல் வேட்டையை மையமாகக் கொண்ட படங்களில் படத் தொகுப்பு மிக முக்கியம். இந்தப் படத்திலும் லேசாக பிசிறுகூட தட்டவில்லை. கச்சிதமாக வெட்டி, ஒட்டியிருக்கிறார்கள். அந்த போலீஸ் ஸ்டேஷன் செட்டப்பை அமைத்த கலை இயக்குநருக்கு நமது பாராட்டுக்கள்.

இது போன்ற கிரைம், த்ரில்லர் கதையை கையாளும்போது கண்டிப்பாக தெளிவான திரைக்கதையும், காட்சியமைப்பும் மிக, மிக அவசியம். இயக்குநர் இயக்கத்தில் செய்த முழுமையை கதை, திரைக்கதையில் செலுத்தியிருந்தால் படம் இதைவிடவும் சிறப்பாக இருந்திருக்கும்.

ஒரு இளைஞர் பட்டாளத்தின் முதல் முயற்சியில் ஒரு வித்தியாசமான கதையம்சத்தில் சிறந்த இயக்கத்தில் இந்தப் படம் வந்திருக்கிறது என்பதால் குறைகளை பெரிதாக நினைக்காமல், இந்தப் படத்தை நிச்சயமாக ஒரு முறை பார்க்கலாம்தான்..!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *