தேனி மாவட்டம், கம்பம் சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட அப்பிபட்டி, கோம்பை சிக்காட்சியம்மன் கோவில் மேடு, கம்பம் உத்தமபுரம், கூடலூர் தமணம்பட்டி ஆகிய பகுதிகளில் தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் சார்பில் கட்டப்பட்டுள்ள அடுக்குமாடி குடியிருப்புகளில் காலியாக உள்ள வீடுகளைப் பயனாளிகளுக்கு வழங்குவதற்கான தேர்வு முகாம் சின்னமனூர் நகராட்சி அலுவலக வளாகத்தில் நடைபெற்றது.

முகாமை கம்பம் சட்டமன்ற உறுப்பினரும், தமிழக வெற்றிக் கழகத்தின் தென்மேற்கு மாவட்டச் செயலாளருமான பி.எல்.ஏ. ஜெகநாத் மிஸ்ரா தலைமை தாங்கி தொடங்கி வைத்தார். அடுக்குமாடி குடியிருப்புகளில் மொத்தம் 1,548 வீடுகள் உள்ளன. இதில் 924 வீடுகள் காலியாக உள்ளன. இவற்றைப் பெறுவதற்கான அரசு நிர்ணயித்த மானிய விலை, அப்பிபட்டியில் ரூ.2.11 லட்சம், கோம்பை சிக்காட்சியம்மன் கோவில் அருகே உள்ள அடுக்குமாடி குடியிருப்பு ரூ.2.12 லட்சம், தமணம்பட்டியில் ரூ.2.34 லட்சம், உத்தமபுரத்தில் ரூ.2.94 லட்சம் என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இந்த முகாமில் 300-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் தேவையான ஆவணங்களுடன் ஆர்வத்துடன் விண்ணப்பித்தனர்.
நிகழ்ச்சியில் தமிழக வெற்றிக் கழக தேனி தென்மேற்கு மாவட்ட இணைச் செயலாளர் கூடல் செல்வேந்திரன், மாவட்டப் பொருளாளர் கௌதம், மாவட்டச் செயற்குழு உறுப்பினர் அய்யர், சின்னமனூர் நகரச் செயலாளர்கள் செல்லகுமார், சலாம் மற்றும் கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

முகாமுக்கான ஏற்பாடுகளை சட்டமன்ற உறுப்பினரின் தனிச் செயலாளர் ரகுபதி செய்திருந்தார்.




