தந்தை பெரியாரைப் பற்றி பேசுவதற்கு சீமானுக்கு எந்த தகுதியும் இல்லை என்று தேனி மாவட்டம் சின்னமனூரில் பத்திரிக்கையாளர் சந்திப்பில் அ.ம.மு.க பொதுச் செயலாளர் டி.டி.வி தினகரன் தெரிவித்தார்.
தேனி மாவட்டம் சின்னமனூரில் அம்மா மக்கள் முன்னேற்றக் கழக தேனி தெற்கு மாவட்டம் கம்பம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட செயல் வீரர்களின் ஆலோசனை கூட்டம் தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொதுச்செயலாளர் டி.டி.வி தினகரன் பங்கேற்று சிறப்புரையாற்றினார். இதில் தேனி தெற்கு மாவட்ட நிர்வாகிகள், கம்பம் சட்டமன்றத் தொகுதி நிர்வாகிகள், சார்பு அணி நிர்வாகிகள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த டி.டி.வி தினகரன் பேசுகையில்..,
திருப்பரங்குன்றம் பிரச்சனையில் மாவட்ட ஆட்சித் தலைவர், அமைச்சர்கள் என அனைவரும் தலையிட்டு சுமுகமான தீர்வை கொண்டு வந்திருக்க வேண்டும் அவ்வாறு செய்யாததால் சகோதரர் நோக்கத்துடன் பழகும் இந்து, முஸ்லீம்களிடம் பிரச்சனைகளை தி.மு.க அரசு தான் ஏற்படுத்தி உள்ளது. அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் கட்சியினர் தேர்தல் ஆணையத்திற்கு எதிராக வழக்கு தொடர்ந்தனர், அதற்கு தேர்தல் ஆணையம் சின்னம் பற்றிய விசாரணையில் தலையிடலாம் என தீர்ப்பு அளிக்கப்பட்டது எங்களின் வெற்றிக்கு முதல் தொடக்கம் என்றார்.

மேலும், முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் புரட்சித்தலைவி அம்மா, புரட்சி தலைவர் எம்ஜிஆர் போன்று எடப்பாடி செயல்படுகிறார் என்று கூறுவது பற்றி கேட்டபோது..,
உதயகுமார் எப்பொழுதுமே காமெடி செய்து கொண்டே இருப்பார். இந்த உலகத்தில் அம்மா மற்றும் எம்.ஜி.ஆர் அவர்களுக்கு நிகராக யாருமே கிடையாது. ஆர்.பி. உதயகுமார் பேசுவதை காமெடியாக நாம் எடுத்துக் கொள்ள வேண்டும் என்றார்.
அத்திக்கடவு நிகழ்ச்சியை செங்கோட்டையன் புறக்கணித்தது பற்றி கேட்டதற்கு, அத்திக்கடவு அவிநாசி திட்டத்திற்கு வித்திட்டவர் புரட்சித்தலைவி அம்மா. இந்த விஷயத்தில் செங்கோட்டையன் எடுத்திருப்பது அம்மாவின் விசுவாசிகள் அனைவரும் ஏற்றுக்கொள்ளும் ஒரு விஷயமாகும் என்றார்.
தொடர்ந்து, தந்தை பெரியாரை பற்றி தற்போதுள்ள சர்ச்சை பேச்சு குறித்து கேட்டபோது, தந்தை பெரியாரை பற்றி தரக்குறைவாக பேசுவதற்கு எந்த ஒரு அரசியல்வாதிக்கும் அருகதை கிடையாது. தங்களுடைய சுய விளம்பரத்திற்காக ஒரு சிலர் அவரைப் பற்றி அவதூறாக பேசி வருகிறார்கள் என்று கூறினார்.
