• Fri. Jan 17th, 2025

சிறுவயதில் மாயமான குழந்தையை ஏஐ தொழில்நுட்பம் மூலம் தேடும் பணி தீவிரம்

Byவிஷா

May 21, 2024

கடந்த 2011ஆம் ஆண்டு காணாமல் போன ஒன்றரை வயது குழந்தையை 14 வருடங்களுக்குப் பிறகு, ஏஐ தொழில்நுட்பம் மூலம் தேடும் பணியை காவல்துறை தீவிரப்படுத்தியுள்ளது.
2011ம் ஆண்டு சென்னையில் வீட்டிற்கு முன் விளையாடிக் கொண்டிருந்த ஒன்றரை வயது குழந்தை திடீரென மாயமானது. இதுகுறித்து காவல்துறையில் புகார் அளிக்கப்பட்டது. குழந்தை எங்கேயும் கிடைக்கவில்லை. இத்தனை ஆண்டுகள் கழித்த பின்னும் என் குழந்தை எங்காவது உயிருடன் இருப்பாள் என்ற நம்பிக்கையில் பெற்றோர் அடிக்கடி போலீசாரிடம் விசாரித்து வருகின்றனர். இந்த வழக்கு மகளிர் குற்றப்பிரிவின் கீழ் மீண்டும் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. அதன்படி இத்தனை ஆண்டுகளுக்கு பின் குழந்தையின் உருவத்தை வைத்து, நீதிமன்ற உத்தரவுப்படி செயற்கை நுண்ணறிவு தொழில் நுட்பம் மூலம் 14 வயது இளம்பெண்ணை வரைந்துள்ளனர்.
இந்த படத்தின் அடிப்படையில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றத்தடுப்பு பிரிவு போலீசார் மீண்டும் தேடுதல் வேட்டையில் இறங்கியுள்ளனர். சென்னை சாலிகிராமம் மஜித் நகர் வலம்புரி விநாயகர் கோயில் தெருவில் வசித்துவருபவர் கணேஷ். இவரது ஒன்றரை வயது பெண் குழந்தை கவிதா செப்டம்பர் 19,2011ல் வீட்டின் முன்பு விளையாடிக் கொண்டிருந்த போது திடீரென மாயமாகியது. வீடு மற்றும் அப்பகுதி முழுவதும் தேடியும் குழந்தை கிடைக்கவில்லை. புகாரின்படி போலீசார் மாயமான குழந்தையின் ஒன்றரை வயது குழந்தையின் புகைப்படத்தை வைத்து விசாரணை நடத்தினர். ஆனால் குழந்தையை காணவில்லை. இதற்கிடையே இந்த வழக்கு தற்போது பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றத்தடுப்பு பிரிவுக்கு மாற்றப்பட்டு விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
நீதிபதி சந்தோஷ், காவல்துறை குழந்தையின் புகைப்படத்தை செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் மூலம் 14 வயதில் அவர் எப்படி இருப்பார் என்று புகைப்படம் வரைந்து நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார். கவிதாவின் 14 வயது தத்ரூபமாக உத்தேசமான புகைப்படம் வரைந்ததை போலீசார் கவிதாவின் பெற்றோரிடம் காட்டினர். இதனைக் கண்ட சிறுமியின் பெற்றோர் கண்கலங்கினர். இந்த புகைப்படம், ஒன்றரை வயது கவிதாவின் புகைப்படம் இரண்டையும் வைத்து பேஸ்புக், டிவிட்டர், இன்ஸ்டாகிராம், வாட்ஸ் அப் என அனைத்து சமூக வலைத்தள பக்கத்தில் பதிவிட்டு 13 ஆண்டுகள் கடந்த பிறகும் மாயமான தனது மகள் கவிதாவை அவரது பெற்றோர் மற்றும் உறவினர்கள் தேடி வருகின்றனர். குழந்தை பற்றி ஏதேனும் தகவல் தெரிந்தால் காவல்துறைக்கு உடனே தகவல் தெரிவிக்கவும் தொலைபேசி எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. இச்சம்பவம் பெரும் சோகத்தையும், நெகிழ்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.